‘நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் உண்மைகள் ஆராயப்பட வேண்டும்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்
பாராளுமன்றில் இதனைக் குறிப்பிட்ட அவர், ‘அவ்வாறான நடவடிக்கைகள் நம்பகத்தன்மையானதாக இருக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘மஹிந்தவின் ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னணி இராணுவத்திற்கான முடிவை தீவிரமாக ஆதரித்தது’. ‘அவ்வாறான நிலையில் உண்மையில் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயன்முறைக்கு ஆதரவளிக்குமா? என்ற சந்தேகம் காணப்படுகிறது’. ‘எனவே, கடந்த கால அரசாங்கங்களின் போக்கில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டும்’ என்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
‘கடந்த காலங்களில் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பல பொய்களும் பரப்பப்பட்டுள்ளன’.’தமிழ் மக்கள் உரிமைகளைக் கோரும் போது அது தொடர்பான போராட்டத்தை பயங்கரவாதம் என்று குறிப்பிட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாகவே பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன’.’தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் அந்த நடவடிக்கைகளை மாற்றியுள்ளதா என்ற கேள்விகள் எழுகின்றன. இன மோதல்கள் தொடர்பாக இதன் அணுகுமுறை என்ன?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
‘இந்த நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின், என்ன நடந்தது என்று ஆராய வேண்டும். அது உள்நாட்டு பொறிமுறையாக இருக்க முடியாது”சகலவற்றையும் உள்ளடக்கிய பொறிமுறையும், விசாரணை செயன்முறைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதுவே குறைந்தப்பட்ட தகுதியாக இருக்கின்றது’ என்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.



