சர்வதேச விசாரணைகளை கோரி நிற்கும் தமிழ் மக்களுக்கு அது தேவையில்லை என்பது தெரிய வரும்: க.இளங்குமரன்

‘சர்வதேச விசாரணைகளை கோரி நிற்கும் தமிழ் மக்களுக்கு அது தேவையில்லை என்பது எதிர்வரும் காலங்களில் தெரிய வரும்’ என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களின் சர்வதேசம் நோக்கிய கோரிக்கைக்கு அமைய விசாரணைகளின் தேவை குறித்து சர்வதேசங்களே தீர்மானிக்க வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழ் மக்கள், ஏன் சர்வதேச விசாரணையை வேண்டி நிற்கின்றார்கள் என்றால் முந்தைய அரசாங்கங்களின் அசமந்த போக்கு அவர்களுக்கு சிறந்த தீர்வினை வழங்கவில்லை’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

‘எதிர்வரும் காலங்களில் நாங்கள் சிறந்த தீர்வினை வழங்கும் போது, சர்வதேச விசாரணை தேவையில்லை என மக்கள் நினைப்பார்கள். அந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்’ என்றும் க.இளங்குமரன் குறிப்பிட்டுள்ளார்.

‘யுத்த காலப்பகுதியில் பல்வேறு போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு பல பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன’. ‘அந்தவகையில், கடந்த ஜெனீவா மாநாட்டிலும் இந்த பிரச்சினை குறித்து பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது’. ‘தமிழ் மக்கள், தங்களது நீண்ட கால பிரச்சினை குறித்து உள்நாட்டு விசாரணையை விட சர்வதேச விசாரணையையே எதிர்பார்த்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், தற்போதைய அரசாங்கமும் சர்வதேசங்களின் தலையீட்டுடனான விசாரணையை எதிர்க்கும் வகையிலான தீர்மானத்தை தான் ஜெனீவா மாநாட்டில் முன்வைத்திருந்தது’. இது முந்தைய அரசாங்கங்களை போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகின்றதா என்ற சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

‘இந்நிலையில், ‘தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வினை வழங்கும்’ என்றும் இதன் காரணமாக ‘ தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையின் தேவை குறித்த தெளிவை பெறுவார்கள்’ என்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கூறியுள்ளார்.