பொறுப்புக்கூறுலை மீட்டெடுக்க வேண்டுமென ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தல்

‘இலங்கை அரசாங்கம் சிவில் சமூகம் மற்றும் சுயாதீன ஊடகங்கள் மீதான தேவையற்ற விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கி குடியுரிமைக்கான இடத்தை மீட்டெடுக்க வேண்டும்’ ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உலகளாவிய செயல்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மாரிட் கோஹோனென் ஷெரிப் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் உரையாற்றிய அவர், ‘பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைவதற்கும், அதன் மூலம் சமூகப் பிளவுகளை குணப்படுத்துவதற்கும், நாட்டைப் பாதித்துள்ள விடயங்களை தவிர்ப்பதற்கும் இது ஒரு முக்கியமான வாய்ப்பாகும்’ என்று வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி கூட்டணி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றது. ‘இது மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் இலங்கை மக்களிடமிருந்து ஒரு தீர்க்கமான ஆணையைக் குறிக்கிறது’ என்று மாரிட் கோஹோனென் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

‘ஜனாதிபதி குமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் தனது தொடக்க உரையில், பல தசாப்தங்களாக இனப் பிளவுகள் மற்றும் இனவெறியால் ஏற்பட்ட தீங்குகளை ஒப்புக்கொண்டதாகவும், ஊழலைக் கையாள்வது மற்றும் 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் உள்ளிட்ட பிற குறிப்பிடத்தக்க வழக்குகளுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வது உள்ளிட்ட நீண்டகால மனித உரிமைகள் கவலைகளை நிவர்த்தி செய்வதாகவும் உறுதியளித்தார்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘உள்நாட்டுப் போரின் போதும், முந்தைய கிளர்ச்சிகளின் போதும் நடந்த பெரிய அளவிலான மீறல்களுக்கு இந்த உறுதிமொழிகள் நீட்டிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஷெரிப் எடுத்துரைத்தார்’.
முழுமையான விசாரணைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறல் ஆகியவற்றை அவர் தமது உரையில் வலியுறுத்தினார்.

‘காணாமல் போனவர்களின் அலுவலகத்தை வலுப்படுத்த சீர்திருத்தங்கள், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டம் போன்ற சிக்கலான சட்டங்களைத் திருத்த வேண்டும்’ என்று ஐ,நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் அழைப்பு விடுப்பதாக அதன் உலகளாவிய செயல்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மாரிட் கோஹோனென் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த அமர்வில் கருத்துரைத்த, ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி ஹிமாலி அருணதிலகா, அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நம்பகமான மற்றும் சுயாதீனமான உள்நாட்டு பொறிமுறைகளின் மூலம் மனித உரிமைகள் சவால்களை எதிர்கொள்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.