தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வினவிய சிறிதரன்!

‘சிறைக்கைதிகளும் மனிதர்களே என்ற வார்த்தைக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய (28) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

4 விடயங்களை முன்வைத்து நீதியமைச்சரிடம் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்படி, ‘தற்போது எத்தனை தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்? இந்த தமிழ் அரசியல் கைதிகள் எந்தெந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்? மனிதாபிமான அடிப்படையிலோ, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையிலோ அவர்களை விடுதலை செய்ய முடியுமா?’ என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, ‘குறித்த கேள்விகள் முக்கியமானவை’ என்றும் இந்த விடயம் தொடர்பில் முழுமையான விளக்கத்தை வழங்குவதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் வரவு செலவு திட்டத்தினுடைய அறிக்கையை நாளை (01) சமர்ப்பிக்கவுள்ளதால் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

எனவே ‘குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு ஒரு வார காலஅவகாசம் வழங்குமாறும் அவர் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அமைச்சரின் கருத்துக்கு இணங்குவதாக தெரிவித்தார்.

மனிதாபிமான அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.