யாழ் ஊடகவியலாளர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு எதிர்ப்பு

‘தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்’என சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட போலிச் செய்தி தொடர்பில் யாழ்ப்பாண ஊடகவியலாளர்களான பிரதீபன் மற்றும் பரதன் ஆகியோரிடம் பலாலிப் பொலிஸார் 6 மணித்தியாலங்களுக்கு மேல் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமைக்கு அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘விசாரணைகளுக்கு அப்பால் குறித்த ஊடகர்களின் தொலைபேசியை பரிசோதித்தமை, அவர்களின் பிரத்தியேக செயற்பாடுகள் குறித்து விசாரித்தமை போன்ற செயற்பாடுகள் தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி அடிபணிந்து வைத்திருக்கச் செய்யும் மற்றுமொரு வேலையாகவே இருப்பதாக அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கருதுகிறது’.

‘வடக்கில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் அந்தப்பகுதி பிரச்சினைகளை தைரியமாக பகிரங்கப்படுத்தி வரும் சூழ்நிலையில் சம்பந்தமேயில்லாத பிரச்சினைகளில் அவர்களை சம்பந்தப்படுத்துவது ஏற்புடையதல்ல’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு ஊடகவியலாளர்கள் இருவர் மீதான அடக்குமுறை தொடர்பில் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அவர்கள் இருவருக்கும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல்கள் ஏதாவது ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டுமென வலியுறுத்தி கூறிவைக்க விரும்புவதாகவும் அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.