படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியும், எம்மை நாம் ஆளும் அரசியல் தீர்வும் வேண்டும் என்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை’ என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (22) நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
‘புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை தாமதப்படுத்துவது இந்த நாட்டை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும்’.
‘மக்களை ஏமாற்றினால் கோட்டபய ராஜபக்ஷவை விடவும் மிக மோசமான விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும்’ என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரித்துள்ளார்.
‘வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது’.
‘தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு மாகாண மக்கள் பெருமளவில் வாக்களித்தார்கள்’.
‘ஆனால் மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 6 சதவீதமான அளவு தான் வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’என்று சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘அத்துடன் இந்த வரவு, செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது’.
‘ஒதுக்கீடுகள் வரவு, செலவுத் திட்ட பதிவுகளில் இருக்கும் ஆனால் நடைமுறையில் ஏதும் நடக்காது’.
‘வடக்கு மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள்’.
‘காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 2,900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்’.
‘எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்துக்கு ஒரு முன்மொழிவை கூட இதுவரையில் முன்வைக்கவில்லை’ என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.



