வெடுக்குநாறிமலையில் இடம்பெறவுள்ள சிவராத்திரி விரதம் – விபரங்களை சேகரிக்கும் காவல்துறை

நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் இடம்பெறவுள்ள சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலய பூசகர் உள்ளிட்ட தரப்பினர் நெடுங்கேணி பொலிசாரால் அழைக்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, அந்த திணைக்களம் மற்றும் நெடுங்கேணி காவல்துறையால் பொதுமக்கள் வழிபாடுகளை மேற்கோள்வதற்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கடந்த வருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6 மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்ய முற்பட்ட 8 பேர் நெடுங்கேணி பொலிசாரால் அடாவடியான முறையில் கைது செய்யப்பட்டனர்.
இது தமிழ் மக்கள் மத்தியில் கவலையை ஏற்ப்படுத்தியதுடன், பொலிசாரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் அது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கைது செய்யப்பட்ட 8 பேரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்த நீதிபதி, காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினையும் தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் இம்முறை சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலயத்தின் பூசகர் உள்ளிட்ட தரப்பினர் நெடுங்கேணி காவல்துறையால் அழைக்கப்பட்டு அவர்களிடம் விபரங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த, ஆலயத்தின் பூசகர் ‘இந்த முறை சிவராத்திரி விரத பூஜைகளை காலை முதல் மாலை 6 மணிவரை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். ‘மாலை 6 மணிக்கு பின்னர் பிறிதொரு பகுதியில் சிவனுக்கான இரவு அனுஸ்டானங்களை செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.