வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கற்கள் இடப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவித்து தமது வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு வெல்வேரி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருகோணமலை – வெல்வேரி கிராமத்தில் பல தசாப்த காலமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வாழ்ந்து வந்த மக்கள் நாட்டில் ஏற்பட்ட தொடர்ச்சியான வன்செயல் காரணமாக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அங்கிருந்து தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து மீள குடியமர்ந்து வந்தனர்.
இந்நிலையில் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து பாதுகாப்பின் காரணமாக மீண்டும் மீள குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் குறித்த பகுதியில் வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் எல்லைக் கற்கள் இடப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
1970 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே 30க்கு மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்குள் தாங்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களாக வீட்டின் சிதைவுகள், சீமேந்தால் கட்டப்பட்ட சுமார் 10 அடி விட்டமுடைய பல கிணறுகள், நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்பட்ட கால்வாய்கள் உட்பட பல ஆதாரங்களும் தமது காணிக்கான ஆவணங்களும் வைத்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் தமது காணியைச் சுற்றியுள்ள ஏனைய பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறுகிய பரப்பளவைக் கொண்ட தமது காணிகள் மாத்திரம் வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.
எனவே வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள சுமார் 40 ஏக்கருக்கு மேற்பட்ட தமது காணிகளை விடுவித்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோடு நாட்டின் நெல் உற்பத்திக்கு பங்களிப்பு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குமாறும் புதிய அரசிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.