நாளைய தேர்தலிற்காக தமிழர் பிரதேசங்களில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவலரண்கள்

நாளை(16)ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலையொட்டி, தமிழர் பிரதேசங்களில் பல காவலரண்களும் சோதனைச் சாவடிகளும் திடீரென தோன்றியுள்ளது மக்களை விசனத்திற்குள்ளாக்கியுள்ளது.

தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளதாத தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததையடுத்து அவற்றை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் வழமைக்கு மாறாக தற்போது இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அவதானித்து வருவதாகவும், இது தொடர்பாக நேற்று நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் தேர்தல் கட்சி அங்கத்தவர்களிற்கிடையிலான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் நிஷாந்த வர்ணசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

நேற்று  ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாசா, கோத்தபயா ராஜபக்ஸ, ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் அநுரகுமார திஸநாயக்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர்களது கட்சி உறுப்பினர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.