‘புலனாய்வு பிரிவினரின் அறிக்கைகளின் அடிப்படையிலேயே முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் தீரமானிக்கப்படும்’ என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட சிலரின் பாதுகாப்புக்காக தற்போதும் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவினர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, ‘அரசியல் ரீதியாகவுள்ள நட்பு காரணமாக எவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை’ என்றும் ‘புலனாய்வு பிரிவினரின் பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையிலேயே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு பொலிஸ் விசேட பிரிவினால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏன் குறித்த விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பிலும் ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, ‘பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு அமைச்சு தெளிவான விளக்கமொன்றை வழங்கும்’ என்று தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தொடர்ந்தும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான காணொளி ஒன்று அண்மையில் பேசுபொருளானமை குறிப்பிடத்தக்கது.



