‘புதிய அரசியலமைப்பாக்க முயற்சியை தமிழ்த் தேசமாக ஒருமித்து எதிர்கொள்ள வேண்டும்’ என்று தமிழ் சிவில் சமூக அமையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த அமையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதனை தமது பாராளுமன்ற காலப்பகுதிக்கான செயற்றிட்டங்களில்
ஒன்றாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தது. பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு நிர்ணய சபை மூலமாகவோ அல்லது பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வடிவத்திலோ புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான முயற்சி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்படக்கூடிய நிலையில் புதிய அரசியலமைப்பாக்கல் முயற்சியை எவ்வாறு தமிழ்த் தேசமாக எதிர்கொள்வது என்பது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாக உள்ளது’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘அரசாங்கம் அரசியலமைப்பாக்க முயற்சியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. இவ்விடயத்தில் நாம் தயார் நிலையில் இருத்தல் அவசியமானதாகும்’ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் கணிசமான அளவில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் வாக்களித்திருந்தார்கள் என்பது வெளிப்படையான உண்மை’. ‘பொதுத்தேர்தலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முடிவுகளானவை தமிழ்த் தேசிய கருத்தியலை மக்கள் மறுதலிக்கவில்லை என்பதனை எடுத்தியம்புவதோடு மாறாக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அரசியல் கட்சிகள் மீது அவர்களுக்குள்ள சலிப்பே தேசிய மக்கள் சக்தி கட்சிக்கான வாக்காக வெளிப்படுத்தப்பட்டிருந்தது என்பதனையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது’. ‘எனவே, தேர்தல் கால கூட்டுக்களுக்கு அப்பால் தமிழர் தேசம் முகங்கொடுக்கக்கூடிய சவால்களுள் ஒன்றாக தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் சேர்ந்து இயங்குவது என்பது முக்கியமானதாகும்’ என்று தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.
‘அந்த வகையில் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கட்சிகளானவை பாராளுமன்றத்தினூடாக முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்பாக்கல் முயற்சி தொடர்பாக கருத்தொருமிக்க ஒருமைப்பாட்டை அடைய வேண்டும் என்பது தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பாகும்’ என்றும் தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



