வடக்கு,கிழக்கில் கிராமிய வீதிகளைப் புனரமைக்க அமைச்சரவை அனுமதி

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பு செய்வதற்கும் மேம்படுவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ‘கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முக்கிய பணியாக அடையாளங் காணப்பட்டுள்ளது’ என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வீதியைப் புனரமைப்புச் செய்தல், நிர்மாணித்தல் மற்றும் அதனை பராமரிப்பதற்காக விரிவான அணுகுமுறையை அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பல வீதிகள் புனரமைக்கப்பட வேண்டிய நிலைமையில் காணப்படுவதுடன், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1,500 கிலோமீற்றர்கள் வடமாகாணத்திலும் 500 கிலோமீற்றர்கள் கிழக்கு மாகாணத்திலும் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

‘அவற்றுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ‘புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான வீதிகளைத் தெரிவு செய்வதற்கு பொதுமக்கள், நிதியனுசரணை வழங்குகின்ற அமைப்புக்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்பைப் பெற்றுக் கொள்ள விதந்துரைக்கப்பட்டுள்ளது.

‘அதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது’ என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.