ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்குடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானத்தை அமைச்சரவை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்ற செய்திகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
‘சட்டமா அதிபர் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் என்றாலும், அவர் ஒரு நீதித்துறை சார்ந்த பதவியை வகிக்கிறார்’ என்றும், ‘கிடைக்கக்கூடிய சாட்சியங்கள் மற்றும் சட்டப்பூர்வ அனுமதியின் அடிப்படையில் அவர் தீர்மானங்களை எடுக்க வேண்டும்’ என்றும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியது.
இது தொடர்பில் தங்களது கவலையை வெளிப்படுத்தி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றையும் சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பியுள்ளது.
‘வழக்குத் தொடரும் தீர்மானங்களில் இடம்பெறும் அரசியல் தலையீடு, சட்டமா அதிபரின் சுதந்திரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் குறை மதிப்பிற்கு உட்படுத்தும்’ என்று சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
‘சட்டமா அதிபரின் தீர்மானங்களை ரிட் அல்லது அடிப்படை உரிமைகள், உட்பட நீதித்துறை செயல்முறைகள் மூலம் சவாலுக்கு உட்படுத்த செய்ய முடியுமென உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது’ என்றும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய மூவரையில் விடுக்க முடியும் என பரிந்துரைக்கப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.
லசந்த விக்ரமதுங்கவின் சாரதி, கடத்தப்பட்ட வழக்கிலிருந்தே அவர்கள் மூவரையும் விடுவிக்க முடியுமென பரிந்துரைத்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ‘ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது’ என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.



