ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டு சட்ட மாஅதிபர் கையொப்பமிட்ட கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் இந்த கொடூரமான குற்றங்களுக்கு எதிராக சட்டம் மற்றும் நீதியை அமுல்படுத்துவது அடிப்படை விடயமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
லசந்தவின் படுகொலையை நினைவுகூரும் சுதந்திர ஊடக இயக்கத்துடன் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்தக் குற்றங்களுக்கு நீதி வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டார் என்று கூறி தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் உரிமை ஒரு பொறுப்பான அரசாங்கத்துக்கு இருக்க முடியாது.
இலங்கையில் குற்றவாளிகளுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் சட்ட அமுலாக்கம் இல்லாவிட்டாலும் இவ்வாறான நடவடிக்கைகள் அதற்கான சட்டப் பின்னணியை வழங்குகின்றன என்பது எமது அவதானிப்பு.
எனவே ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் அவரது அரசாங்கமும் உடனடியாக தலையிட்டு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இல்லையேல், நீதியை கோரும் அனைத்து தரப்பினரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரே முன்னணியில் இணைவதை தடுக்க முடியாது என்பதையும், மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதில் எதிர்பார்க்கப்படும் நேர்மையை பிரதிபலிக்க அரசாங்கமும் ஜனாதிபதியும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுவோம் என தெரிவித்துள்ளது.



