இலங்கையில் கடந்த வருடம் அரச வைத்தியசாலைகளுக்கு அவசியமான இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு இருப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வைத்திய பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி, அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த வருடம் மருத்துவ விநியோகப் பிரிவு மூலம் அரச வைத்தியசாலைகளுக்குத் தேவையான இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக செலவிடப்படும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதையே காணக் கூடியதாக உள்ளது.
ஆகையால் திரைசேரியில் இருந்து ஒதுக்கப்படும் பணத்தை மருந்து கொள்வனவு மற்றும் சிகிச்சை சேவைகளுக்காகப் பயன்படுத்தத் திட்டமிடுவதற்குப் பதிலாக, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்துவது அவசியம்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



