‘யாழ் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள், விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தங்களுக்கு வழங்க வேண்டுமென தன்னிடம் கோரியிருந்தனர்’ என்று வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநர் காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார்.
‘இந்தச் சந்திப்பின் போது விகாரை தற்போது அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது’ என்றும் அது தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் இதன்போது சமர்ப்பித்திருந்தனர். அத்துடன் குறித்த விகாரைக்கு உரித்தான காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளது என்பதையும் ஆளுநருக்கு அவர்கள் தெரியப்படுத்தினர்.
இந்தநிலையில் ‘விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த காணி உரிமையாளர்கள் அந்தக் காணியை விடுவித்துத் தருவதுடன், விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்கவேண்டுமென கோரியிருந்தனர்’ என்று வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘காணி உரிமையாளர்களது கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பில் தையிட்டி விகாராதிபதியுடனும், நயினாதீவு விகாரையின் விகாராதிபதியுடனும் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘அத்துடன் இந்த இணக்கப்பாடு யோசனை தொடர்பில் புத்தசாசன அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ‘தையிட்டி விகாரையை அகற்றி , அந்த காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது கருத்துரைத்த ஆளுநர், ‘காணி உரிமையாளர்கள் மாற்று காணியை கோரியுள்ளனர்’ என்று குறிப்பிட்டார்.
குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அதனை தெளிவுப்படுத்தும் விதத்தில் ஆளுநர் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



