மீண்டும் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கட்டணம் – எதிர்ப்புகள் வலுப்பெறுகின்றன

04. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுப்பர் டீசலின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 331 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எவ்வாறாயினும், ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 183 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 309 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371 ரூபாவாகவும் தொடர்ந்தும் பேணப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலையை 286 ரூபாவாக, தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் விலை திருத்தத்துக்கு அமைய, தங்களது எரிபொருட்களின் விலையும் திருத்தப்படுவதாக லங்கா ஐஓசி மற்றும் சினொபெக் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்தநிலையில், ‘எதிர்பார்த்த வகையில் எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை’ என்று அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் மற்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் என்பன குற்றஞ்சாட்டியுள்ளன.

‘எதிர்க்கட்சியில் இருந்த போது எரிபொருள் கட்டணத்தை குறைக்க முடியுமென தெரிவித்த தேசிய மக்கள் அரசாங்கம் தற்போது அதனை மறந்து செயற்படுகிறது’ என்று அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

‘எரிபொருள் விலை குறைக்கப்படாவிட்டாலும் போலியான காரணங்களை முன்வைப்பதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ‘டீசல் விலை அதிகரிக்கப்பட்டமையினால் பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது’ என்றும் 3 ரூபாய் நட்டத்திலேயே பேருந்து கட்டணம் அறவிடப்படுகிறது’ என்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.