03. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே அரசியல் கூட்டணியை அமைப்பதற்கான ஆரம்ப பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளன. எனினும் ‘இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது’ என்று இரு கட்சிகளின் பொதுச் செயலாளர்களும் நேற்று (31) தெரிவித்துள்ளனர்.
‘இரு கட்சிகளுக்கும் இடையிலான ஆரம்ப பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
‘நாங்கள் பல விடங்கள் பற்றி விவாதிக்க வேண்டியிருக்கும். இரு கட்சிகளும் இன்னும் சின்னம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரவில்லை. சரியான நேரத்தில் விவாதங்களின் முடிவு தொடர்பில் அறிவிக்கப்படும்’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் ஆரம்ப பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதாகக் கூறினார்.
‘எதிர்காலத் தேர்தல்களில் ஒன்றாகப் போட்டியிடுவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம்,’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு கட்சிகளும் தேர்தல் கூட்டணியை நோக்கிச் செல்வதை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரலவும் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே விரைவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக இரு கட்சிகளுடைய பொதுச் செயலாளர்களும் தெரிவித்துள்ளனர்.
