அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்த மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு அழைப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.
இந்த மனுவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்யும் நோக்கில், அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
‘உத்தேச சட்டமூலத்தில் உள்ள சில சரத்துக்கள் மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதிக்கின்றன’, அவை மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்றன’ என்று மனுதாரர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, இந்த சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சரத்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிடுமாறு மனுதாரர் மனுவின் மூலம் கோரியுள்ளார்.



