இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை ஆதரிப்பது குறித்து பிரிட்டிஸ் பிரதமர் கருத்து

இலங்கையில் சமத்துவம் உண்மை மற்றும் நீதிக்கான முயற்சிகளை ஆதரிப்பது குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது  என தெரிவித்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார்.

பிரதமர்அலுவலகத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையில்,

‘எங்கள் தேசத்திற்கு தமிழ் சமூகம் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளது . எங்கள் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குறித்து நான் மிகவும் பெருமிதம் அடைகின்றேன்.அது ஒரு சிறந்த தருணம் -ஜூலையில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு,ஏற்கனவே உங்கள் தொகுதியை உங்கள் நாட்டை உங்கள் பிரதிநிதித்துவம் செய்து மிகச்சிறப்பாக செயற்படுகின்றார்.

வெஸ்ட்மினிஸ்டரின் மதில்களிற்கு அப்பால் பார்க்கின்றபோது, எங்கள தேசிய சுகாதார சேவையில் ,பாடசாலைகளில்,வர்த்தகங்களில் வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பலர் இங்குள்ளனர். ஆகவே நன்றி, இந்த நாட்டிற்கு நீங்கள் செய்யும் பங்களிப்பிற்கு நன்றி,தைப்பொங்கலை நாங்கள் கொண்டாடும் இந்த தருணத்தில் டவுனிங்வீதியில்  எங்களுடன் இணைந்துகொண்டமைக்காக நன்றி.

வரும்வழியில் நீங்கள் பார்த்திருக்கும் கோலம் இந்த கட்டிடத்தில் நீங்கள் வரவேற்கப்படுவதற்கான சின்னம் என நினைக்கின்றேன். இந்த அறையில் உள்ள சிலருக்கு வரலாறு என்பது துயரம் வேதனையுடன் தொடர்புபட்டதாக உள்ளது என்பது எனக்கு தெரியும்.

ஆகவே நீங்கள் வெறுமனே வரவேற்கப்படவில்லை நீங்கள் இந்த இந்த தேசத்தின் மிக முக்கியமான ஒரு பகுதி பிரிட்டனை உங்கள் தேசம் வீடு என நீங்கள் அனைப்பது குறித்து நாங்கள் பெருமிதமடைகின்றோம்.

இது சேவைசெய்யும் அரசாங்கமாக விளங்கும் என நான் வாக்குறுதியளித்திருந்தேன்.தேர்தலிற்கு மறுநாள் டவுனிங்வீதி பத்தாம் இலக்கத்திற்கு வெளியே நின்றபடி இது மக்களிற்கு சேவையாற்றும் அரசாங்கமாக திகழும் என நான் தெரிவித்திருந்தேன். அந்த சேவை உணர்வு பிரிட்டனின் தமிழ் சமூகத்தின் குருதியில் ஓடுகின்றது.

பொங்கல் பானையை போலவே தமிழ் சமூகத்தின் செழிமையும் பெருந்தன்மையும் நிரம்பிவழிகின்றது,நாடு முழுவதும் ஒளிளையும் நம்பிக்கையையும் கொண்டுவருகின்றது.இலங்கையில் சமத்துவம் உண்மை மற்றும் நீதிக்கான முயற்சிகளை ஆதரிப்பது குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது