அம்பாறையில் தொடரும் கனமழை: வேளாண்மை செய்கை பாதிப்பு

அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த செவ்வாய்க்கிழமை (14)  திறந்துவிடப்பட்டபோதும் இடைவிடாத பலத்த மழை காரணமாகவும் அப்பகுதியில் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று அம்பாறை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன்  அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுகிறது.

இந்த மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக தாழ்நிலங்களும்  வயல் நிலங்களும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நாவிதன்வெளி  பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சவளக்கடை கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட பெரும்போக வேளாண்மை செய்கை நிலங்களில் 2000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சவளக்கடை, அன்னமலை, வேப்பயடி, 5ஆம் கொலனி போன்ற பல்வேறு பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகரித்த மழைவீழ்ச்சி காரணமாக சில குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.