காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை நிறுத்த ஹமாஸ் – இஸ்ரேல் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் , கடந்த 2023, அக்., 7ம் திகதி நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் பணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
இதற்குப் பழிவாங்கும் முகமாக இஸ்ரேல் காசாவில் 15 மாதங்களாக போரை நடத்தி வந்தது. இதில் காசாவில் 60,000க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில்இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 19) அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தனி தெரிவித்துள்ளார்.
இந்த போர் நிறுத்தம், “காஸாவில் நடைபெறும் சண்டையை நிறுத்தும், பாலத்தீன மக்களுக்கு மிகவும் தேவையான மனிதநேய உதவிகளை அதிகரிக்கும், பணயக்கைதிகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
