யுத்தம் முடிந்து 15 வருடங்கள் கடந்துவிட்டபோதும் அரசியல் கைதிகள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் மீளவும் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் விடுதலைக்காக பல்வேறு தரப்பினராலும் பல்வேறு விதமாகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் இதுவரையில் அரசியல் கைதிகளின் விடுதலை முழுமை பெறவில்லை. மாறிமாறி ஆட்சிப் பீடமேறிய அரசாங்கங்கள் தேர்தல்களுக்கு முன்னால் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக வாக்குறுதிகளை வழங்கியபோதும் தேர்தல்களின் பின்னர் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையிலேயே, பிறந்திருக்கும் புத்தாண்டிலாவது அரசியல் கைதிகளின் விடுதலையைச் சாத்தியமாக்கும் நோக்கில் போராளிகள் நலன்காப்பகம் வடக்கு கிழக்கின் பல்வேறு மாவட்டங்களிலும் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (06.01.2025) யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கமும் கலந்து கொண்டு தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியது