‘இலங்கை அரசு நிகழ்த்தியது இனப்படுகொலையே’ என பகிரங்கமாகக் கூறிவரும் கனேடிய அரசாங்கத்துக்கு நன்றி : சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளாமல் பின்வாங்கும் சர்வதேச அரங்கில், தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை தான் எனத் தொடர்ந்து கூறி, அதற்கான நீதியையும் கோரிவரும் கனேடிய அரசாங்கத்துக்கு தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.

கனேடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின்பேரில் கடந்த வாரம் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக்குழுத் தலைவருமான சிவஞானம் சிறிதரன், கடந்த வார இறுதியில் கனடாவின் முடிக்குரிய பூர்வீகக்குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளாமல் பின்வாங்கும் சர்வதேச அரங்கில், ஈழத்தமிழர்கள்மீது இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை தான் என்றும், இறுதிப்போரின்போது கொல்லப்பட்டோர் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கவேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தி தமக்கான ஆதரவை வெளிப்படுத்திவரும் கனடாவுக்கு சிறிதரன் நன்றி தெரிவித்தார்.

அத்தோடு கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு ஆதரவாக கனேடிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஹரி ஆனந்தசங்கரிக்கும் அவர் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

மேலும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, மனித உரிமை மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன சார்ந்து அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.