‘Clean Srilanka’ – தமிழ், முஸ்லிம்கள் நிராகரிப்பு: சிறிநேசன் எம்.பி அறிக்கை

ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கிளீன் சிறிலங்கா என்னும் ஆணைக்குழுவானது ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 18 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த 18 உறுப்பினர்களும் பெரும்பான்மை இனத்தவர்களாகவே உள்ளனர். தமிழர்களோ முஸ்லிங்களோ அதில் இல்லை.  என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

471162066 1184518239699945 104621325153269992 n ‘Clean Srilanka’ – தமிழ், முஸ்லிம்கள் நிராகரிப்பு: சிறிநேசன் எம்.பி அறிக்கை

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…

பல்லின சமூகங்கள் உள்ள இலங்கையில் தமிழ் பேசும் சமூகத்தவர்கள் இடம்பெறாத நிலைப்பாடு தமிழ் பேசும் சமூகத்தவர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறுதான் கடந்த பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தின் காலத்தில் கோத்தபாய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட தொல்லியல் ஆணைக்குழு என்கின்ற, தமிழ் பேசும் மக்களுக்குத் தொல்லைகள் கொடுத்த ஆணைக்குழுவிலும்  தமிழ் பேசும் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை.

அந்த பொதுஜனப் பெரமுன அரசும் தொல்லியல் ஆணைக்குழுவும் இனமத அடிப்படைவாத, அடிப்படையில்தான் அமைந்திருந்தது.

அதன் செயற்பாடுகளான தொல்லியல் இடங்களை இனங்காணும் செயற்பாடுகள் மற்றும் பௌத்த விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளும் அடிப்படைவாத செயற்பாடுகளாகவே இருந்தன.

தற்போதைய தேசிய மக்கள் சக்தியால் அமைக்கப்பட்ட கிளீன் சிறிலங்கா ஆணைக்குழுவில், தமிழ் பேசுனர் இடம்பெறாத நிலைமையும் சந்தேகத்தைத் தருகின்றன.

முதல் கோணினால் முற்றும் கோணும் என்கின்ற பழமொழியொன்று தமிழில் உண்டு. ஆயின், இந்த ஆணைக்குழுவில் தமிழர்கள், முஸ்லிங்கள் இடம்பெற  வேண்டியது அவசியமாகும். இல்லாது விட்டால், குழுவின் செயற்பாடுகளிலும் சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே, ஜனாதிபதி அநுரவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அடிப்படைவாதமற்ற தன்மையை ஆரம்பத்தில் இருந்தே உறுதிப்படுத்த வேண்டும்.

எது எப்படியாக இருந்தாலும் 75 ஆண்டுகளாக அடிப்படைவாதம், ஊழல், மோசடிகள், திருட்டுகள், இலஞ்சம் என்பவற்றால்  நாசமாக்கப்பட்ட இந்நாட்டை சுத்தம் செய்ய வேண்டிய தேவை அவசியமானதாகும் .

சுத்தப்படுத்த வல்ல தமிழர்,முஸ்லிம் பிரசைகளும் இலங்கையில் உள்ளனர் என்பதை ஜனாதிபதி அநுர அவர்கள் நினைவில் கொண்டு, செயலாற்ற வேண்டும் என்றார்.