150 மில்லியன் டொலர் கடனை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியானது வியாழக்கிழமை (19) கையெழுத்திட்டது.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன முன்னிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் தகஃபுமி கடோனோ மற்றும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொனால்ட் கொமஸ்டர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இலங்கையின் மின்சாரத் துறையில் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்கானு கடனுதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடந்த நவம்பர் மாதம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கடனுதவி மூலம் இலங்கை மின்சார சபையின் நீண்ட கால பரிமாற்ற திட்டத்தில் பல அத்தியாவசிய திட்டங்கள் 2025-2027 இல் செயல்படுத்தப்படும்.
இது கட்டத்தின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.



