இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன் பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.
இலங்கையில் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காலப் பகுதியில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு, தட்டுப்பாடு நிலவிவந்த பின்னணியில், கடந்த இரண்டு வருடங்களில் பொருட்களின் தட்டுப்பாடு படிப்படியாக குறைந்தது. விலைகளிலும் வீழ்ச்சி காணப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மீண்டும் விலைவாசி உயந்துள்ளது.குறிப்பாக அரிசி, வெங்காயம், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் புதிதாக ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாட்டில் எதிர்கொள்ளும் பிரதான சவால் மிகுந்த விடயமாக இந்த அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் பொருட்களுக்கான தட்டுப்பாடும் காணப்படுகின்றது.
எனினும், இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் கடந்த நவம்பர் மாதம் முதல் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால், இந்த பிரச்னைக்கான சரியான தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் 200 ரூபாவிற்கு (இலங்கை ரூபாய்) விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டரிசி தற்போது 260 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற போதிலும், நாட்டரிசிக்கான தட்டுப்பாடு சந்தையில் இன்றும் காணப்படுகின்றது.
இலங்கையில் நாட்டரிசி என்பது வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் அரிசி வகையாகும்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் 190 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பச்சரிசி தற்போது 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன், 240 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசி, தற்போது 260 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
290 ரூபாவிற்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கீரி சம்பா அரிசி, தற்போது 280 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சாதாரண மக்கள் பயன்படுத்தும் நாட்டரிசி மற்றும் பச்சரிசி ஆகியவற்றின் விலைகளே அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.