மாகாணசபை முறைமையும் ஜே வி பி யின் வெறுப்பும் அன்றும் இன்றும்! – பா.அரியநேத்திரன்

இப்போது அரசியலில் பேசும் பொருளாக மாறி இருப்பது ஜே.வி.பி யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறிய மாகாணசபை முறைமையை புதிய அரசியலமைப்பு சட்டத்தில் நீக்கப்படும் என கூறிய கருத்தாகும்.

இது முதன்மை செய்தியாக பேசப்படுவது என்னைப்பொறுத்தவரை பொருத்தப்பாடானதாக நான் பார்க்கவில்லை. ரில்வின் சில்வா மாகாணசபை முறை மையை தொடர்ந்தும் நாம் ஆதரிப்போம் என கூறியிருந்தால் அதனை முதன்மை செய்தியாக ஆச்சரியத்துடன் நோக்கலாம் என்பதே எனது வாதம். ஜே.வி.பி  இன்று நேற்றல்ல 1987, ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையும் இதனை எதிர்த்து வரும் ஒரு கட்சி என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.

மாகாணசபைகளின் அல்லது  13வது திருத்தத்தின் இந்த தேக்க நிலைக்கு ஜே.வி.பி.யின் சந்தர்ப் பவாத, இனவாத அரசியல்  முக்கிய பொறுப்பாக அமைகிறது. பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தங்களுக்கு எதிராக செயற்பட்ட சிங்கள, பௌத்த வாதிகள்,அவர்களுடைய கட்சிகள்  போன்றே சிவப்பு சட்டை ஜே.வி.பி யும் தொடர்ச்சியாக எதிராக செயற்பட்டது என் பதே உண்மை.

ஈழவிடுதலைப்போராட்டத்தில் இந்தியாவின் பங்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலை ஆரம்பத்தில் இருந்தது அதனால் திம்புப் பேச்சுவார்த்தைகள் இந்திய அரசின் அனுசரணையுடன் இலங்கை அரசுக் கும் தமிழீழ போராட்டத்துடன் தொடர்புடைய ஈழ விடுதலை இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்குமிடையே ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கு டன் பூட்டான் நாட்டின் தலைநகரான திம்பு வில்மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை குறிக்கும். இப்பேச்சுவார்த்தைகள் 1985,யூலை,08, தொடக்கம்13, வரையும் பின்னர் 1985, ஆகஷ்ட் 12,13, ம் திகதிகளில் இரண்டு கட்டங்களாக இடம்பெற்றன.

அதில் தமிழர் தரப்பு தமிழீழ விடு தலைப்புலிகள் சார்பாக அன்ரன் பாலசிங்கம், திலகரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாக வரதராஜப்பெருமாள், கேதீஷ்வரனும், தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாக சாள்ஷ் அன்ரனிதாஸ், மோகனும்,ஈழம்புரட்சி அமைப்பு சார்பாக ராஜிசங்கர், இரத்தினசபாபதியும், தமிழ் மக்கள் விடுதலை கழகம் சார்பாக வாசுதேவா, சித்தாத்தனும், தமிழர் விடுதலை கூட்டணி சார்பாக சிவசிதம்பரம், சம்பந்தன், அமிர்தலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசின் தரப்பில் ஜே. ஆரின் சகோதரரும் பிரபல சட்டவாதியுமான எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன தலைமையிலான பத்துபேர் கலந்து கொண்டனர். இந்திய அரசு சார்பில் ரொமேஸ் பண்டாரி தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்வதற்காக இணைந்திருந்தது.இதில் தமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மற்றைய தமிழ் குழுக்க ளும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இக்கோரிக்

கையைச் சிங்கள அரசு நிராகரித்தது.இதனை தொடர்ந்துதான் 1987 யூலை 29 புதன்கிழமை இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும், இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி யும் கையெழுத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி அதே ஆண்டு 1987,நவம்பர் 14 சனிக்கிழமை  விசேட பாராளுமன்ற அமர்வை கூட்டியே இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது. அதன் பிரகாரம் 1988பெப்ரவரி,03 ம் திகதி திங்கள்கிழமை  அன்று உத்தியோகபூர்வமாக  ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.

அப்படி உருவாக்கப்பட்டாலும்  எட்டு மாகாணசபையாகவே வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையாகவே இருக்கும் என எழுதப்படாத இணக்கப்பாடு ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கும், இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்திக்கும் பேச்சளவில் இணக்கம் காணப்பட்டது.அதன் அடிப்படையில் 1988, தொடக்கம் 2006, வரை 18, வருடங்களாக இணைந்த மகாணசபையாகவே இலங்கை அரசினால் நிருவாகம், மற்றும் நிதி ஒதுக்கீடுகள் கையாளப்பட்டன.

இணைந்த வடகிழக்கு மாகாணசபை தேர்தல் முதன்முதலாக  1988,நவம்பர்,19 ல் நடை பெற்றது. இலங்கை இந்திய ஒப்பந்தம், மாகாணசபை தேர்தல் என்பவைகளை விடுதலைப்புலிகள் ஏற்க வில்லை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுதுமலை பிரகடனம்  1987,ஆகஷ்ட்,04 அன்று, யாழ்ப்பாணம் சுதுமலையில் இடம் பெற்றது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கான  தமிழ் மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகை யாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவாக எடுத்துரைந்திருந்தார்.

அந்த உரையில்  “இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பதைப் பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது. ஆகவே, இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்குத் தெள்ளத்தெளிவாக விளக்கினோம். ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என இந்திய அரசு கங்கணம் கட்டி நின்றது.

இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சினையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது, பிரதானமாக இந்திய இலங்கை உறவு பற்றியது. சிங்கள் இனவாத அரசின்மீது எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லை என்பதையும், இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். என தலைவர் கூறியிருந்தார் அன்று தீர்க்தரிசனமாக “இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன்” என கூறியது எவ்வளவு உண்மை இன்றுவரை 37, வருடங்களாக இது நிறை வேறவில்லை தலைவர் கூறியதுதானே நடந்தது, நடக்கிறது.

இணைந்த வடகிழக்கு மாகாணசபை தேர்தலை விடுதலைப் புலிகள் புறக்கணித்தனர். அப்போது அரசியல் கட்சியாக இருந்த தமிழர் விடுதலை கூட்டணியும் இந்த தேர்தலை புறக் கணித்தனர்.ரெலோ,புளட் என்பவைகளும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை வடகிழக்கில் இந்திய அமைதிப்படையின் துணையு டன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்) ஈழம் தேசிய ஜனநாயக விடு தலை முன்னணி (ஈஎன்டிஎல்எவ்) , ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கியதேசியக்கட்சி ஆகிய நான்கு கட்சிகள் மட்டுமே அந்த தேர்தலில் போட்டியிட்டு ஈபிஆர்எல்எவ் கிழக்கில் 17, இடங்களையும், வடக்கில் 24, இடங்களுமாக மொத்தம் 41, ஆசனங்களையும்,ஶ்ரீலங்கா முஷ் லிம் காங்கிரஷ் கிழக்கில் மட்டும் 17, ஆசனங் களையும், ஈஎன்டிஎல்எவ் வடக்கில் மட்டும் 12, ஆசனங்களையும், ஐ தே. கட்சி கிழக்கில் மட்டும் ஒரு ஆசனத்தையும் பெற்று மொத்தமாக 71, ஆசனங்களுடன் திருகோணமலையில் முதலமைச்சராக வரதராஜப்பெருமாளை நியமித்து இணைந்த வடகிழக்கு மாகாணசபை ஆட்சி அமைக்கப்பட்டது ஆனால் 1990,மார்ச்,31, ம் திகதி வரையுமே மாகாணசபை இயங்கியது அதாவது 1. வருடம்,5, மாதம்,12, நாட்கள் வரதராஜப்பெருமாள் நாட்டை விட்டு ஓடும்போது தமிழீழத்தை திருகோணமலையில் வைத்து பிரகடனப்படுத்திவிட்டே இந்தியப்ப டையினருடன் கப்பலில் ஏறி இந்திய ராஜஸ் தானுக்கு சென்றார்.

இதனுடன் வடகிழக்கு மாகாணசபை இயங்கவில்லை எனினும் ஆளுநர் அதிகாரத்தில் 2006, வரை செயல்பட்டது. 2004,ல் இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஜே.வி.பி 34, ஆசனங்களை பெற்றிருந்தது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 22, ஆசனங்களை பெற்றிருந்தது, மகிந்த ராஷபக்சவின் அரசுக்கு ஜே.வி.பி பூரண ஆதரவை வழங்கி அமைச்சு பதவிகளையும் பெற்றது. அதில் தற்போதய ஜனாதிபதி அனுரா அமைச்சரவையில் விவசாயம், கால்நடைகள், நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக 2004 பெப்ரவரியில் நியமிக்கப்பட்டார். 2005 யூன் 16 இல் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார், ஏன் இராஜனாமா செய்தார் என்று தெரியுமா? ஜே.வி.பிதலைவர் அமரசிங்க, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுதலைப் புலிகளுடனான வட, கிழக்கு மாகாணங்களின் சுனாமி நிவாரண ஒருங்கிணைப்புப்பொறிமுறையை எதிர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கு ஜே.வி.பி தலைவர் அமரசிங்க எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து, ஏனைய ஜே.வி.பி அமைச்சர்களுடன் சேர்ந்து அனுரவும் 2005 யூன் 16 ம் திகதி தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்த இனவாதிதான் இந்த ஜனாதிபதி அனுரா.சரி அதோடு மட்டும் விட்டார்களா? 1987, தொடக்கம் 2006, வரை 18, வருடங்களாக எந்த ஒரு ஜனாதிபதிகளோ கட்சிகளோ செய்யாததை மகிந்தவுடன் இணைந்து உயர் நீதி மன்றில் வழக்குப்போட்டவர்கள் இதே ஜே.வி.பி தான். அதனால் 2006 அக்டோபர் 16 இல் உயர் நீதிமன்றத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தனித்தனி மாகாணங்களாக பிரிக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை அவசர அவசரமாக செயல்படுத்தும்படியாகவே கிழக்கு மாகாணசபை தனியாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் 2008,மே,10,ம் திகதி நடாத்தப்பட்டது.

இந்த தேர்தலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்டியிடக்கூடாது என்ற சதியை பிள்ளையான், கருணா ஆயுத ஒட்டுக்குழுக்களை கொண்டு அப்போதய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப் பினர்கள், கட்சி ஆதரவாளர்களை எச்சரித்து கொலை அச்சுறுத்தலை காட்டி மகிந்த அரசும், இந்தியாவும் விரும்பிய சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானை முதலமைச்சராக நியமித்த வரலாறு இடம்பெற்றது.  முதலாவது கிழக்கு மாகாணசபை 2008லும், இரண்டாவது கிழக்கு மாகாணசபை தேர்தல் 2012,செப்டம்பர்,08, ம் திகதியும் இடம்பெற்றது.அது போலவே வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் 2013,செப்டம்பர் 21ல் இடம்பெற்றது. அதன்பின்னர் 2024, வரை எந்த ஒரு மாகாணசபை தேர்தல்களும் இதுவரை நடை பெறவில்லை. காணி பொலிஷ் அதிகாரம் இல்லாத மாகாணசபை தேர்தலை பெயரளவிலாவது நடத்த முடியாமல் ஆளுநரை முகவர்களாக வைத்து செயல்படும் நிலை தொடர்கிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதய ஜனாதிபதி அனுரா அதிகாரப்பகிர்வு தொடர்பாக தமிழ் மக்கள் விரும்பினால் மாகாணசபை முறைமை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்

கும் என்பதை கூறியிருந்தார், தேர்தல் விஞ்ஞா பனத்திலும் மாகாணசபை 13, வது அரசியல் திருத்தம் ரத்துச்செய்வதாக குறிப்பிடவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்திக்கு 159, பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தது. குறிப்பாக யாழ்மாவட்டத்தில் மூன்று ஆசனங்களும் வன்னியில் இரண்டு ஆசனங்கள் கிடைத்து இலங்கையில் 22, மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த 21, மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி அலைக்கு செல்வாக்கு உள்ளது என்பதால் எதையும் நினைத்தபடி செய்யலாம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதியும் நாமே, பாராளுமன்ற பெரும்பான்மையும் நாமே என்ற திமிருடன் அதன்பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இப்போது புதிய அரசியல் யாப்பில் மாகாணசபை முறைமை இருக்காது என கூறுகிறார்.

ஜே.வி.பி தேசிய மக்கள் சக்தியை பொறுத் தவரை ஏனைய கட்சிகளின் செயலாளர்கள் கூறுவதைப்போல் இந்த கருத்தை தட்டிக்கழிக்க முடியாது. மாகாணசபை முறைமை இல்லை என கூறும் ரில்வின் சில்வா இனப்பிரச்சினைக்கு மாற்றீடான எந்த தீர்வை முன்வைக்கப்போகிறார்,ஒற்றையாட்சிக்குள் குதிரை ஓடும் தீர்வை முன்வைப்பது என்பது தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்பதே அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளின் கொள்கை.

அப்படியானால் வடக்கு கிழக்கில் இருந்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து பாராளுமன்றம் சென்ற பேசாமடந்தைகளான உறுப்பினர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அவர்களுக்கு வாக்களித்த தமிழர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்? குறிப்பாக யாழ்மாவட்டத்தில் திசைகாட்டி அலையில் சிக்குண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தலையாட்ட அனுப்பிய மக்கள் என்ன சொல்லப்போகிறார்கள்,ஜனாதிபதி அநுராவை கடந்த (04/12/2024) சந்தித்த தமிழரசுக்கட்சி எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் புதிய அரசியல் யாப்பு ஏற் படுத்தப்படும்போது அரசியல் தீர்வை பார்ப்போம் ஆனால் மாகாணசபை தேர்தல் உள்ளூராட்சி தேர்தல் முடிந்த பின்னர் நடத்தப்படும் என கூறியுள்ளார் பார்க்கலாம். இதேவேளை இந்த வாரம் முதலாவது வெளிநாட்டு பயணத்தை இந்தியாவுக்கு மேற்

கொள்ளும் ஜனாதிபதி அனுராவிடம் பாரதப் பிரதமர் என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்துப்பார்ப்போம்.