குடியரசுத் தலைவர் தேர்தலில் அனுர குமார திசநாயகர் வெற்றி பெற்றதும், நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தலைமையிலன தேசிய மக்கள் சக்தி பெரு வெற்றி பெற்றதும் முழுமையாக எதிர்பார்த்த நிகழ்வுகளே!
தமிழ் மக்களின் நோக்கில் இந்தத் தேர்தல் முடிவுகளில் கவலைக்குரிய ஒரே ஒரு செய்தி தமிழர் தாயகப் பகுதிகளில் முதன்முதலாகச் சிங்களக் கட்சிகள் பெற்றுள்ள வெற்றிகள்தாம். குறிப்பாகச் சொன்னால் தமிழ் வாக்காளர்கள், அதிலும் இளையோர் அனுர குமாரர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை (சரியாகச் சொன்னால், மயக்கம்) தமிழீழ மக்களின் போராட்டத்தில் ஒரு புதிய நெருக்கடியைக் குறிப்பதாகும். இன ஒடுக்குமுறைக்கு ஆளான மக்கள் தாமாகப் போராடி விடுதலை ஈட்ட முடியாத போது ஒடுக்குமுறையாளரின் பசப்புச் சொற்களை நம்பிக் கொள்ளும் இந்த நெருக்கடிதான் இப்போது அனுர குமார திசநாயகர் என்று பெயர் சூடி வந்துள்ளது.
ஈழத் தமிழ் மக்களின் தேசியச் சிக்கலில் தேசிய மக்கள் சக்தியின் கைகளில் தமிழ்க் குருதியின் கறை படிந்துள்ளது. இன்று உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் உடன் படும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைக் கட்சியான ஜனத விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) என்னும் ஜேவிபிதான் அன்று சுனாமிப் பேரலை அவலத்தால் ஏற்பட்ட பெருந்துயர் துடைக்க ஏற்படுத்தப்பட்ட சுனாமிப் பொதுக் கட்டமைப்பு (P-Toms) உடன்பாட்டை சட்டப் போராட்டம் நடத்தி முறியடித்தது.
இணைந்திருந்த வட- கிழக்கு மாகாணங் களை நீதிமன்று ஊடாகப் பிரித்து வைத்தவர்கள். இறுதிவரை போர் நடத்த வேண்டும் என வற்புறுத்தி இராணுவத்தில் 60,000க்கும் மேற்பட்டவர்களை இணைத்து விட்டவர்கள். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு இவர்களும் பொறுப்பேற்க வேண்டியவர்கள். அனுர குமார திசநாயகர் இலங்கையின் அரசியல் களத்தில் புதிதாக வந்து குதித்த வரில்லை. இரணில் விக்கிரசிங்கர் அரசுடன் 2002ஆம்ஆண்டு புலிகள் செய்து கொண்ட புரிந்து ணர்வு உடன்படிக்கையையும் அதன் அடிப்படையிலான போர் நிறுத்தத்தையும் எதிர்த்து இயக்கம் நடத்தியவர். போர் நிறுத்தத்தை எதிர்த்து 2003ஆம் ஆண்டு கண்டி முதல் கொழும்பு வரை 116 கிலோ மீட்டர் ஐந்து நாள் நடைப்பயணம்சென்றவர். அவரும் ஏனைய ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பி னர்களும் அமைதி முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித் துப் பதவி விலகினார்கள்.
இதன் தொடர்ச்சியாகவே கடந்த 2005ஆம் ஆண்டு தேர்தலில் போர் வெறிக் கூச்சலுடன் போட்டியிட்ட இராசபட்சர் வென்று அதிபராவதற்கு பௌத்த பிக்குகளின் ஹேல உறுமயாவுடன் சேர்ந்து தோள்கொடுத்த கட்சிதான் ஜேவிபி. தமிழர்கள் உள்ளிட்ட இலங்கை வாக் காளர்களுக்குப் பல வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார் அனுர குமாரர்.போர் முடிந்து இத்தனைஆண்டுகள் கழிந்த பிறகும் தமிழ்ப் போர்க் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்ட பல்லாயிரம்தமிழர் களுக்கு நீதி வழங்கப்படவில்லை. வன்பறிப்பு செய்யப்பட்ட தமிழர் நிலம் மீட்டளிக்கப் படவில்லை. தமிழர் தாயகமான வடக்குகிழக்கில் சிங்களப் படை கால்பரப்பி நிற்கிறது. தமிழ்ப் பகுதிகளில் சிங்கள பௌத்த மயமாக்கத்தின் ஊடாகக் கட்டமைப்பியல் இனவழிப்புநடந்து வருகிறது. இந்தச் சிக்கல்களில் ஒருசிலவற்றுக்கு ஒரு வரம்புக்குள் அனுரா தீர்வு கண்டு இடைக்கால நோக்கில் தமிழ்மக்களின் நம்பிக்கையை ஈட்டிக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் சிக்கல்களுக் கெல்லாம் சிக்கலான தேசியச் சிக்கலுக்கு அவரது ஆட்சி எவ்வாறு தீர்வு காணப் போகிறது? என்பதுதான் ’கோடி ரூபாய் வினா.’ அரசமைப்பு மாற்றம் இல்லாமல் ஆள் மாற்றமும் ஆட்சி மாற்றமும் அரசியல் தீர்வுக்கு வழிகோலாது என்பதே பட்டறிவு.
அனுரா தலைமையிலான ஜேவிபியோ, அதன் புது அவதாரமாகிய தேசிய மக்கள் சக்தியோ முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்காகத் தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்கக் கூட இல்லை. போர்க்குற்றம் என்ற கோணத்தில் கூட கருத்துத் தெரிவித்தவர்கள் இல்லை. ஐக்கியநாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் முந்தைய சிங்கள அரசுகளை அடியொற்றியே இன்றைய அனுரா அரசும் நடந்து கொள்கிறது.
இனச்சிக்கலை அனுர குமாரர் தீர்த்து வைப்பாரா? என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால் இனச் சிக்கல் என்ற ஒன்று இருப்பதாகவேஅவர் ஏற்கவில்லை. இலங்கைத் தீவில் தமிழ்த் தேசத்தின் இருப்பையே ஒப்புக் கொள்ளாத ஒருவர் தமிழ்த் தேசியச் சிக்கலுக்குத் தீர்வுகாண்பது எப்படி?
அவர் மெய்யாகவே இனச் சிக்கலைத் தீர்க்க விரும்பினால், இப்போதுள்ள பேரினவாத அரசமைப்பைக் கைவிட்டு, இலங்கைத் தீவில்வாழும் தேசங்களின் நிகர்மையையும் தன்தீர் வுரிமையையும் (சுய நிர்ணய உரிமை) அறிந்தேற்கும் படியான புதிய அரசமைப்பைஇயற்றட்டும். இதற்குத் தேவையான பெரும்பான்மை நாடாளு மன்றத்தில் அவருக்குள்ளது. செய்வாரா அனுரா?
ஆனால் சிறிலங்காவின் சிங்கள பௌத்தப் பேரினவாத ஒற்றையாட்சி அரசமைப்பை மாற்றக் கூடாது என்பதுதான் ஜேவிபியின்விடாப்பிடியான நிலைப்பாடு. சட்டத்தைக் கூட எப்படியோ திருத்தி விடலாம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் செயலாக்க முடியுமா? 13ஆம் சட்டத் திருத்தம் இயற்றப்பட்டு இந்த 35க்கு மேற்பட்ட ஆண்டுகளில் அது முழுமையாகவோ முன்பின் முரணின்றியோ செயலாக்கப்பட்டதில்லை. இனச் சிக்கலுக்கு அனுர குமாரரால் தீர்வுகள் காண முடியும் என்றால், இலங்கையில் இதுகாறும் கோலோச்சிய இனநாயகம் மறைந்து அனுரகுமாரரின் வருகையால் ஜனநாயகம் மலர்ந்து விட்டதா? அவர் தலைமையிலான ஜேவிபியோ, அதன் புது அவதாரமாகிய தேசிய மக்கள் சக்தியோ முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்காகத் தமிழ்மக்களிடம் வருத்தம் தெரிவிக்கக் கூட இல்லை. போர்க்குற்றம் என்ற கோணத்தில் கூட கருத்துத் தெரிவித்தவர்கள் இல்லை. ஐக்கிய நாடுகள்மனிதவுரிமைப் பேரவையில் முந்தைய சிங்கள அரசுகளை அடியொற்றியே இன்றைய அனுராவும் நடந்து கொள்கிறார்.
இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் அமைந்த கடந்த காலம் குறித்து இவர்கள் பகிரங்க மாகத் தற்குற்றாய்வு செய்ததில்லை. தமிழ் மக்களி டம் மன்னிப்பும் கோரியதில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் அரசியற் தலைமையாக இருந்த காலத்தில் தீர்வு காணப்படுவதற்கு முடியாமல் இருப்பதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பே காரணம் என சிறிலங்கா அரசும், அனைத்துலக சமூகமும் குற்றம் சுமத்தினர். ஆனால், இன்று புலித் துவக்குகள் ஓய்ந்து 15 வருடங்கள் கடந்த பின்னரும் தமிழ் மக்களின் தேசியச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, புலிகள் அமைப்பு இருந்த போது இருந்த போராட்ட அழுத்தம் வலுவிழந்த பின்னர் மெல்ல மெல்ல தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அழுத்தம் சிறிலங்கா அரசுக்கு குறைவடைய இன்று தேசிய இனப் பிரச்சினை என்று ஒன்று இருக்கிறநு என் பதனை உதாசீனம் செய்து விட்டு கடந்து செல்ல முயல்கின்றனர்.
இது தொடர்பாக உற்றுக் கவனிக்கும் போது, இவர்கள் நிகர்மைப் போர்வையில் முன் வைக்கும் கருத்துகள் ஈழத் தமிழர் தேசத்தை ஆபத்துக்குள் சிக்க வைக்கும் பொறிகளே தவிர வேறல்ல என்று தெரிகிறது. ஜேவிபியை நிறுவிய ரோகன விஜயவீரா தேசிய இனப்பிரச்சினையை தொடர்பான மா இலெனின் சிந்தனையை மறுதலித்தார். தேசிய இனங்களின் இருப்பையும், அவற்றின் தன்தீர்வுரிமைக் கோட்பாட்டையும் இலங்கைக்குப் பொருந்தாது என மறுதலித்து, இறுக்கமான ஒற்றையாட்சியின் கீழ் அனைவரையும் சமமாக நடத்தும் அணுகுமுறையை முன்மொழிந்தார். இன்றைய தேசிய மக்கள் சக்தியின் அணுகு முறையும் ரோகன விஐயவீரா முன்வைத்த நிலைப் பாட்டை ஒத்ததாகவே உள்ளது.
இவர்களது ஒற்றையாட்சி நிலைப்பாடே, புதிய அரசமைப்பை ஏற்படுத்தும் போது, இன நாயகம் நிலவும் இந் நாட்டில் பேரினவாத மேலாதிக்கத்தை தீவிரமாக நிலைநிறுத்தும் முயற்சியாக அமையும். இந்த முறை தமிழ் மக்களது ஆதரவும் தமக்கு உள்ளது என்று கூறி பேரினவாத மேலாதிக்கத்தை நியாயப்படுத்த இவர்கள் முனையக்கூடும். இது ஒரு பாரிய ஆபத்து.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் வலுவீனங்கள் காரணமாக மக்களுடனான உறவில் இடைவெளி ஏற்படும் போது ஊழல் ஒழிப்பு என்பது கவர்ச்சிக் குரியதாகத் தோன்றலாம். தேசிய மக்கள் சக்தி ஊழல் ஒழிப்பு தொடர்பான முன்னேற்றங்களையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால், தமிழ் மக்களின் கூட்டுரிமை உறுதிப்படுத்தப்படுவதற்கோ அல்லது தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் இனவழிப்பு ஆபத்து நீங்குவதற்கோ இந்த ஆட்சி மாற்றம் துணை செய்யப் போவதில்லை. அனுரா தலைமையிலான அரசுக்கு நாம் விடுக்கும் அறைகூவல்கள்: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை விலக்கிக் கொள்வீர்களா?
உங்கள் ஆட்சியில், அணுகுமுறையில் தமிழ் மக்கள் போராட வேண்டிய அவசியம் வராது என்று தமிழ் மக்கள் மத்தியில் கருத்துரைக்கிறீர்கள். நீங்கள் கூறுவதில் உங்களுக்கு உண்மையில் நம்பிக்கை இருக்குமானால் அரசமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தைக் கைவிட்டு, குடியாட்சிய வழியில், கருத்துரிமையுடன் ஈழத் தமிழ்த் தேசியர்கள் தம் அரசியற் செயற்பாடுகளை நடத்தும் சூழலை உருவாக்குவீர்களா? ஒன்றுக்கு இரண்டு தடவை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட உங்கள் மீதான தடை அகற்றப்பட்டு, நீங்கள் நீண்ட நெடுநாட்கள் சுதந்திரமாக அரசியல் செய்ய வழிவகை செய்யப் படவில்லையா? இதில் உங்களுக்கு ஒரு நியாயம்; தமிழர் போராட்ட அமைப்புக்கு ஒரு நியாயம் என்றால் அதனை இனப்பாகுபாடு என்று அல்லாமல் வேறு எவ்வகையில் புரிந்து கொள்ள முடியும்? தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்கத் தமிழீழத் தனியரசு உட்பட ஏனைய தீர்வு முறைகளையும் முன்வைத்து தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் பொது வாக்கெடுப்பு நடத்த முன்வருவீர்களா?
தமிழ் மக்கள் மீது நீங்களும் சேர்ந்து ஏவிய கொடும் போரின் மூலம் அவர்களின் முது கெலும்பை உடைத்து, மக்களுக்குரிய ஜனநாயக வெளியை மூடி வைத்துக் கொண்டு செய்யும் அரசியல் ஒர் ஒடுக்குமுறை அரசியல் அல்லவா! இதில் பெருமை வேறு கொள்வது அரசியல் அபத்தம் அல்லவா!



