வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.
இந்த கன மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், மூதூர் கிழக்கு, வெருகல், கிண்ணியா, தம்பலகாமம், புல்மோட்டை, குச்சவெளி உட்பட பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மற்றும் உப்புவெளி எல்லைக்குட்பட்ட சில பகுதிகளில் நீர் நிரம்பி வழிந்து ஓடாத நிலையில் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
திருகோணமலை நகரசபையின் செயலாளர் தே. ஜெயவிஷ்ட்ணு திருகோணமலை நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நீரை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். மேலும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச் முகம்மது கனி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து நீரை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகளை கிண்ணியாவில் முன்னெடுத்து வருகின்றனர்.
அதே போல் தம்பலகாமம் கோயிலடி பகுதியை அண்டிய வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது இதனால் நெற் செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது தவிர தொடர் அடை மழை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன குறிப்பாக முள்ளிப்பொத்தானை, மீரா நகர், பாலம் போட்டாறு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் அதிகளவான நீர் தேங்கி நிற்பதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதிகளில் நீரை வெளியேற்ற தம்பலகாமம் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 12 ஆயிரத்து 485 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 879 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஒலுவில் பிரதேச தாழ் நிலைங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தஞ்சம் அடையத் தொடங்கிவருகின்றார்கள் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதே போல் மலையகத்திலும் வெள்ளத்தால் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.