
இலங்கையின் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (13) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேர்தல் அலுவலகத்தில் இருந்து இன்றையதினம் காலை முதல் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதே போல்,
நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன.
நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் 605,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் 65 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பதுளை மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பதுளை மத்திய மகா வித்தியாலயம், தர்மதூத சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் இன்று (13) கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தில் 530 வாக்களிப்பு நிலையங்களில் 705772 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை, வியழுவ, பசறை, பதுளை, ஹாலிஎல, ஊவா பரணகம, வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
மேலும், 69 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் 318 வாக்களிப்பு நிலையங்களுக்கு உரிய வாக்குப்பெட்டிகளை வாக்கெடுப்பு நிலையங்களுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கை திருகோணமலையில் அமைந்துள்ள தி/விபுலானந்தா கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டது.
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
