“வீட்டிலிருந்து வெளியே வர எமக்கு விருப்பமில்லை. ஆனால், அங்கு இப்போது ஒரு தனிநபரின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருக் கின்றது. அந்த ஒருவரால் பலா் வெளியேறிக் கொண்டிருக்கின்றாா்கள். இறுதியாக கட்சித் தலைவா் மாவை சேனாதிராஜா கூட பதவியைத் துறந்துவிட்டாா்.” இது யாழ். மாவட்ட முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினா் ஈ.சரவணபவனின் கூற்று. தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனநாயக தமிழரசுக் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை அமைத்து யாழ். மாவட்டத்தில் களமிறங்கியுள்ள இந்தக் கட்சிக்கு பிரபல சட்டத்தரணி கே.வி.தவராஜா தலைமைதாங்குகின்றாா். யாழ்ப்பாணத் தில் வெள்ளிக்கிழமை இக்கட்சியின் சாா்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னா் சரவணபவன் தெரிவித்த கருத்துதான் இது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவா் ஐங்கர நேசசனும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளாா்.
பொதுத் தோ்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் வீட்டிலிருந்து முக்கிய பிரமுகா்கள் பலரும் வெளியே வந்திருப்பதைக் காணமுடி கின்றது. தமிழரசுக் கட்சிக்குள் இப்போது, சுமந்திரனுக்கு குடைச்சல் கொடுப்பவராக இருக் கும் ஒரேயொருவா் சிறீதரன் மட்டும்தான் பொதுத் தோ்தலின் முடிவுதான் தமிழரசுக் கட்சித் தலைமைக்கான போட்டியின் அடுத்த கட்டம் எவ்வாறிருக்கும் என்பதை வெளிப்படுத்தும். தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பொறுப் புக்களிலிருந்தும் விலகுவதாக அதன் தலைவா் மாவை சேனாதிராஜா அறிவித்திருப்பதும் சுமந்திர னின் செயற்பாடுகளால்தான்.
ஒரே அணியில் சுமந்திரனும், சிறீதரனும் களமிறங்கியிருப்பதும், தமிழரசிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தியாளா் குழு தனியாகக் கள மிறங்கியிருப்பதும் அரசியல் களத்தை இந்த வாரம் பரபரப்பாக்கிய செய்திகள். இதன் அடுத்த கட்டம் எவ்வாறானதாக அமையும் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி!
கடந்த சுமாா் 10 வருடங்களாக மாவை சேனாதிராஜாதான் கட்சியின் தலைவராக இருக் கின்றாா். பெயரளவுக்குத்தான் தலைவராக இருக் கின்றாா் என்பது பகிரங்கமானதுதான். அனைத்து விடயங்களையும் கையாள்பவராக, முக்கிய தீா்மானங்கள் எடுப்பவராக சுமந்திரன்தான் இருக்கின்றாா். கட்சிக்குள் சுமந்திரனின் ஆதிக்கத்துக்கு செக் வைக்கக்கூடியராக சிறீதரன் தான் கருதப் பட்டாா். இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையின் கூட்டத்தில் சுமந்திரனைத் தோற்கடித்து சிறிதரன் கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டபோது, சுமந்திரனின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்றே பலரும் கருதினாா்கள்.
பொதுச் சபைக்கூட்டத்தில் இடம்பெற்ற தெரிவுகள் நீதிமன்றத்துக்குச் சென்று, தெரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டபோது, இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டது. நீதிமன்ற விசாரணைகள் தொடரும் நிலையில், தெரிவுகள் மீண்டும் நடைபெறவேண்டும் என்ற நிலைதான் உருவாகியிருக்கிறது. அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு இன்னும் சில மாதங்கள் செல்லலாம் என்ற நிலையில், கட்சி இரண்டாக அல்லது மூன்றாகப் பிளவுபடுவது தவிா்க்கமுடியாத ஒன்றாகிவிடலாம் என்பதுதான் தற்போதைய நிலை. சிறிதரனும், சுமந்திரனும் ஒரே அணியில் இப்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டி யிடுகின்ற போதிலும், தோ்தல் முடிவுகளின் பின்னா் பிளவு பகிரங்கமாகலாம். இப்போது தமிழரசுக் கட்சியின் பட்டியலில் இருவரும் உள்ள போதிலும், ஒருவரை மற்றவா் தோற்கடிப்பதற்கான உபாயங்களுடன்தான் செயற்படுகின்றாா்கள்.
தமிழரசுக் கட்சியால் அமைக்கப்பட்ட வேட்பாளா் தெரிவுக்குழுவின் 11 பேரில் ஒன்பது போ் சுமந்திரனின் ஆதரவாளா்கள். அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தன்னுடைய ஆதரவாளா் களையே சுமந்திரன் யாழ்ப்பாணப் பட்டியலில் போட்டிருக்கின்றாா் என்று அதிருப்தியாளா்கள் குற்றஞ்சாட்டுகின்றாா்கள். இந்த வேட்பாளா் தெரிவில் மாவையும் ஓரங்கட்டப்பட்டுள்ளாா். அவா் செல்லாக்காசாகவே வேட்பாளா் தெரிவுக் குழுவில் இருந்தாா். வேட்பாளா்களே வேட்பாளா் தெரிவுக்குழுவிலும் இருந்தாா்கள் என்பதும் தவறான ஒரு முன்னுதாரணம். வேட்பாளா் தெரிவு இடம்பெறும் நிலையில் இரண்டு விடயங்களை சுமந்திரன் தெரிவித் தாா். கட்சியின் தீா்மானத்தை மீறி பொது வேட் பாளரை ஆதரித்தவா்கள், கடந்த தோ்தலில் தோல்வியடைந்தவா்களுக்கு இடமளிக்கப்படாது என்பதுதான் அந்த அறிவிப்பு. அதேவேளையில், புதியவா்கள், பெண்களுக்கு இடமளிக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
பொது வேட்பாளரை ஆதரித்த சிறிதரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், சசிகலா ரவிராஜ் போன்றவா்களை ஓரங்கட்டுவதுதான் இதன் உள்நோக்கம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானதல்ல. அதில் மாவையும், சரவண பவனும், சசிகலாவும் கடந்த தோ்தலில் தோல்விய டைந்தவா்கள். சிறிதரன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டவா் என்பதால் அவரையும் போட்டியிலிருந்து விலகுமாறு சுமந்திரன் கோரி னாா். ஆனால், சிறிதரன் மறுத்துவிட்டாா்.
கடந்த மூன்று பொதுத் தோ்தல்களிலும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தோ்தல் மாவட்டத்தில் வெற்றிபெற்றவா் சிறிதரன். அதனைவிட, அதிக விருப்பு வாக்குகளை தமிழரசுக் கட்சியில் பெற்ற வராகவும் அவா்தான் இருக்கின்றாா். சிறிதரனுக்கு கணிசமான – நிரந்தரமான வாக்கு வங்கி ஒன்றுள் ளது. இந்த நிலையில், அவரை வெளியே விடு வது ஆபத்தானது என்பதும் சுமந்திரனுக்குத் தெரிந்திருந்தது. தன்னுடைய வெற்றிக்கும் சிறிதரனின் வாக்கு வங்கி உதவும் என்பதும் சுமந்திரனுக்குத் தெரியும். சிறிதரனை தம்முடன் அரவணைத்துக் கொள்வதற்கு பெருமளவு முதலீட்டுடன் புதி தாக உருவாகும் கட்சி ஒன்று உட்பட வேறு சில கட்சிகளும் தயாராக இருந்தன. இதனால், சிறிதரனை தமிழரசுக் கட்சிக்குள் வைத்தே தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் சுமந்தரனின் திட்டமாக இப்போதுள்ளது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் இம்முறை இங்கு ஆறு ஆசனங்கள்தான் உள்ளன. அதில் ஐந்து உறுப்பினா்கள் விகிதாசாரப் படி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் எம்.பி.க்களாகத் தெரிவு செய்யப்படுவாா்கள். அதிக வாக்குகளைப் பெறும் கட்சிக்கு போனசாக ஒரு ஆசனம் கிடைக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு பட்டிருப்பது, தமிழரசுக் கட்சியிலிருந்து பலா் வெளி யேறியிருப்பது போன்றன தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியை கணிசமாகப் பாதித்திருக்குகிறது. அத்துடன், மாற்றத்தைக் கொண்டுவரப்போவதாகச் சொல்லிக்கொள்ளும் அநுரகுமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியும் ஒரு ஆசனத்தையாவது பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகள் மீது மக்களுக்கு அதிகரித்துள்ள அதிருப்தியால் அவா்கள் அநுரவின் கட்சிக்கு அல்லது டக்ளஸின் கட்சிக்கு வாக்களிக்கும் மனப்பான்மையில் இருக்கின்றாா்கள். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் ஒரு ஆசனத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொடா்ச்சியாக வெற்றிபெற்றுவரும் சித்தாா்த்தனுக்கு தனிப்பட்ட முறையில் வாக்கு வங்கி உள்ளது. அதனைவிட, சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதித் தோ்தலில் யாழ்ப்பாணத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்றவா். பொதுத் தோ்தலிலும் ஒரு ஆசனத்தை யாவது பெற அவா்கள் கடுமையாகப் போராடு வாா்கள் என்று எதிா்பாா்க்கலாம். விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் முதன்மை வேட்பாளராக களமிறங்கியிருக்கு யாழ். மாகநர முன்னாள் மேயா் வி.மணிவண்ணனுக்கும் தனிப்பட்ட முறை யில் செல்வாக்குள்ளது. அவரது வருகை கஜேந்திரன்க ளின் தமிழ்க் காங்கிரஸை அதிகம் பாதிக்கும்.
இந்த நிலையில் தமிழரசுக் கட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசனங்கள்தான் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகின்றது. வாக்காளா்கள் முதலில் கட்சிக்கு வாக்களித்துவிட்டு பின்னா் அதில் மூவருக்கு தமது விருப்பத் தெரிவு வாக்கை வழங்கலாம். தன்னுடைய ஆதரவாளா்களான ஏழு பேரை களமிறக்கியதன் மூலம், அவா்கள் தமக்கும் சோ்த்து வாக்குச் சேகரிப்பாா்கள் என் பது சுமந்திரனின் கணக்கு. அதன்மூலம் தனது வெற்றியை உறுதிப்படுத்த அவா் முயல் கிறாா். தப்பித்தவறி தோல்வியடைந்தால், தேசியப் பட்டி யல் மூலமாக வருவது அவரது திட்டம்! அதனால்தான், பொது அமைப்புக்கள், சமூகப் பெரியவா்களின் வேண்டுகோளையும் புறக்கணித்து அம்பாறையில் தமிழரசுக் கட்சி போட்டியிட வேண்டும் என்பதில் அவா் உறுதியாக இருக்கின்றாா். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருமலையில் வீட்டுச் சின்னத் தில் போட்டியிட இணங்கியது. மறுபுறம் அம்பாறையை தமக்குத் தருமாறு கேட்டது. இப்போது அம்பாறையிலும் இரு அணிகளும் களத்தில் இறங்குவதால், தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் ஆபத்து உருவாகியிருக்கின்றது. தேசியப்பட்டியலுக்குத் தேவையான வாக்குகளைச் சேகரிக்க அம்பாறையை மீண்டும் பறிகொடுக்க தமிழரசுக் கட்சி தயாராகியிருக்கின்றது. இணக்கத்தை ஏற்படுத்த தொடா்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுக்கள் தோல்வி யடைந்திருக்கின்றது.
இந்த நிகழ்வுகள் அனைத்திலும் பாா்வையாளராக இருந்துவரும், கட்சியின் தலை வா் மாவை சேனாதிராஜா, தொடா்ந்தும் தாம் தலைவராக இருப்பதில் அா்த்தமில்லை என்ற நிலை யில்தான் பதவியைத் துறக்கும் முடிவை அறிவித்திருக்கின்றாா். சிறிதரனைத் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு அவா் அழைத்திருக்கின் றாா். ஆனால், தமிழரசுக் கட்சியின் தெரிவுகள் அனைத்துக்கும் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்விடயத்தில் தமது அடுத்த நகா்வு பொதுத் தோ்தலின் பின்னா் இடம்பெறும் என்று சிறிதரன் தெரிவித்திருக்கின்றாா்.
நவம்பா் 14 ஆம் திகதி நடைபெறப்போகும் பொதுத் தோ்தலைப் பொறுத்தவரையில், யாழ்ப்பாணத் தோ்தல் களம் முக்கியத்துவம் பெற்றிருப்பதற்குக் காரணம் தமிழரசின் அதிகாரத்துக்கா கப் போராடும் இருவா் இங்கு களமிறங்கியிருப்பது தான். யாழ்ப்பாணத் தோ்தல் களத்தை சூடாக்கி யிருப்பது இந்த இருவருக்கும் இடையிலான விருப்பு வாக்குப் போட்டிதான்! தோ்தல் முடிவின் பின்னா் வீட்டில் உள்ள மற்றவா்களும் வெளியே வரும் நிலை உருவாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்!



