உலகில் 21ம் நூற்றாண்டு பிறக்கையில் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் உலகின் மூத்த குடிகளான ஈழத்தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? தங்களின தேசியத் தலைமையில் தங்களுக்கான சீருடை அணிந்த முப்படைகள், நிர்வாகக்கட்டமைப்புக்கள், சட்டவாக்க சட்ட அமுலாக்க முறைமைகள் கொண்ட நடைமுறையரசில் சிறிலங்கா வால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளும் வென்று தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கிச் சிறிலங்காவின் முப்படைகளும் மேற்கொண்ட இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு அரசியல் நடவடிக்கைளுக்கு நடுவிலும் உறுதியுடன் தங்கள் உயிரையும் உடைமைகளையும் நாளாந்த வாழ்வையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் 22வது ஆண்டில் உலகம் போற்றக் கூடிய முறையில் வாழ்ந்து கொண்டிருந்தனர். இது ஈழத்தமிழர்கள் குறித்த மிலேனியத் தொடக்க உலக வரலாறு.
அப்பொழுது ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை என்பது அவர்களின் இறைமையின் மீளுறுதிப்படுத்தலை அவர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும் ஏற்று ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கும் வளர்ச்சிகளுக்கும் அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் தங்களின் நடைமுறையரசை உலக அரசாக ஏற்க வேண்டும் என்பதாக இருந்தது. இதனை 2009ம் ஆண்டின் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு மூலம் சிறிலங்கா 176000 ஈழத்தமிழர்களைத் தேசமாகவே இனஅழிப்புச் செய்து பின்னடையச் செய்தது. இதுவும் ஈழத்தமிழரின் உலக வரலாறு.
ஆனால் இன்று இறைமைக்கு முன்னுரிமை கொடுக்காது மக்களுக்கு மதிப்பு அளிக்காது வரலாற்றை மீளுற்பத்தி செய்யாது ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் 15 ஆண்டுகள் ஆட்சியாளர்களுக்கும் வல்லாண்மைகளுக்கும் முகவர்களாக அரசியல் செய்ததின் விளைவு இன்று ஆயிரக்கணக்கான வேட்பாளர்களாக பல நூறு அரசியல் கட்சிகளாக சில நூறு தனியார் கட்சிகளாக சந்தையில் நிற்பது போல எந்த அதிகாரமும் இல்லாத சிறிலங்காப் பாராளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் பிரிந்து நின்று சிங்களக் கட்சிகள் அதிக வாக்குகள் பெறும் நிலையை உருவாக்கியுள்ளமையை தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய காட்சிகள் உறுதியாக்கியுள்ளன.
அப்படியானால் ஈழத்தமிழருக்கு நடந்தது தெரியும். நடப்பனவும் தெரியும். நடக்கவேண்டியது ஈழத்தமிழரின் இறைமையை மீளுறுதி செய்வதே என்பதும் தெரியும். இந்தத் தன்மையுடன் எந்தக் கட்சியோ தனியாளோ உங்கள் முன் தேர்தலில் போட்டியிட்டால் உங்கள் வாக்கினை இறைமையை மீளுறுதி செயயக் கூடிய அவருக்குச் செலுத்தி நீங்களும் இறைமையை மீளுறுதி செய்து சனநாயக வழியில் முன்னெடுக்கப்படும் ஈழத்தமிழர் தேசியப் போராட்டத்திற்கான பங்களிப்பைச் செலுத்துங்கள் என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்து. அதுவே தேசியத் தலைமை உங்களிடம் விட்டுச் சென்ற பொறுப்பை நிறைவேற்றிய மகிழ்ச்சியை உங்களுக்குத் தரும்.
அதனை விடுத்து ஒரு தேசமாக 2009 இல் உலகு கண்ட தாயகத்தில் ஒரு கதிரைக்காக இன்று ஆயிரக்கணக்காண குழுக்களாக, அலங்கோலமாக ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் நிற்பதைப் பார்க்க சத்தி வருகிறது. அதுவும் மரத்துக்கு மரம் தாவும் குரங்குகள் போல கட்சிக்குக் கட்சி தாவும் குரங்குகளாக பெண்
அரசியல்வாதிகள் கூட வீட்டில் இருந்து சங்குக்குக் தாவுவதும் சைக்கிளிலிருந்து வீட்டுக்குத் தாவுவதும் ஒரு புறம்.
வீட்டுக்குள் இருக்கும் பூனை தனக்குப் பிடித்ததைக் களவு எடுத்துக் கொண்டு ஓட்டமாக ஒடுவது போல மக்களுக்கு அறிமுகமான தேர்தல் சின்னங்களை வீடு முதல் சங்கு வரை அந்த அந்த அமைப்பில் இருந்து கொண்டே களவு எடுத்துக்கொண்டு ஓடோடென்று ஒடுவதும் அதற்குப் பெயர் கட்சியைக் காத்தல் என்று கதையளப்பதும், பொதுத்தேசியக் கட்டமைப்பொன்றை சிவில் சமுகத்தினர் படாதபாடுபட்டுக் கட்டியெழுப்பிய நிலையில் அதற்குள் முகாமைத்துவ 14 இல் ஒன்று என்று சொன்ன ஊடகவியலாளரே வீட்டுக்குப் பாய்வதும், உண்மையில் கடந்த வார ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் செயல்களை வீடியோ பண்ணினால் நகைச்சுவைத் திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது உங்களுக்குதான் என்று அடித்துச் சொல்லலாம்.
காற்றாகவும் ஒளியாகவும் நீராகவும் நிலமாகவும் வானமாகவும் தங்கள் வாழ்வையே தேசவிடுதலைக்காக மக்களின் சுதந்திர வாழ்வுக்காக மாற்றியமைத்த மாவீர்களின் தேசத்தில் நின்றுதான் 225 உறுப்பினர்கள் கொண்ட சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் மூலையில் குந்தியிருந்து கிண்டல்களும் கேலிகளும் உதாசீனங்களும் கண்டு எதையுமே செய்ய இயலாது எழுந்து வரும் உறுப்பினர்களாகப் போய் அமர இத்தனை பதவியாசையை வெளிப்படுத்துகின்றீர்கள். எத்தனை கேவலமான செயல்கள் செய்கின்றீர்கள். மாவீரர்களின் ஆன்மா உங்களை என்றுமே மன்னிக்கவே மன்னிக்காது. நின்ற சொல்லராக நிற்கும் மனிதப் பண்பே இல்லாத நீங்கள் தலைமையைப் பற்றிப் பேசிகின்றீர்களே நீங்களா ஈழத்தமிழர்களுக்குத் தலைமை தரப்போகின்றீர்கள்? இதுதான் இன்று ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகநாடுகள் எங்கும் கேட்கும் கேள்வி.
ஒரு பெரும் தியாக வரலாற்றை வரைந்த ஈழத்தமிழர்களுக்கு 15 ஆண்டுகளில் இந்த நிலை என்றால்? அது எப்படி நிகழ்ந்துள்ளது. பதில் இப்படியொரு நிலை தோன்ற வைத்த அனைத்து அரசியல்வாதிகளும் தயவு செய்து நந்தி விலகி வழி விட வேண்டும் என்பது போல உங்கள் அலுவல்களைப் பார்த்துக் கொண்டு மக்களிடம் அரசியலை விடுங்கள். அவர்கள் செய்வார்கள். அவர்கள் தலைவனின் செல்லப் பிள்ளைகள். மாவீர்களின் தாய் தந்தையர் கணவன் மனைவி சகோதர சகோதரிகள். வலிசுமந்த நெஞ்சுகள். அவர்களுடையதுதான் நாடு. உங்களுடைய ஆங்கில அறிவையும் சிங்கள நட்பையும் வல்லாண்மைகளின் உறவையும் பணத்தையும் பட்டத்தையும் வைத்துக் கொண்டு மக்களை அரசியலை விட்டு ஓடத்துரத்தி விட்டு நீங்கள் வெளிப்படையாகவே சிங்களக் கட்சிகளுக்கு வாக்கு வேண்டிக் கொடுக்கும் முகவர்களாக நிற்கின்றீர்கள். இவ்விடத்தில் ஆர்வம் உள்ளவர்கள் போராட்டக்காலத்தில் தெருக்கூத்துக்கள் போட்டது போல மக்களுக்கு நடுவில் கலை மூலம் உள்ளவர்களில் நல்லவர்கள் என நீங்கள் உணர்ந்தால் அவர்களுக்கு வாக்களிக்க நிகழ்ச்சிகளைச் செய்யுங்கள். ஊடகங்களில் இறைமைக்கு உழைத்தவர்கள் மக்களின் நல்வாழ்வுக்கு உழைத்தவர்கள் விவரங்களை கட்சி என்பது தாண்டி வெளியிடுங்கள். அப்போதாவது மக்களுக்குப் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கக் கூடிய சில பாராளுமன்ற உறுப்பினர்களாவது கிடைக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் ஆயிரக்கணக்கான வேட்பாளராக ஒரு சிறிய வாக்காளர் தொகையைப் பிரிப்பதால் சிங்களக்கட்சிகளுக்கு தேசியப்பட்டியல் உறுப்புரிமையும் கூடக் கிடைக்கக் கூடிய அபாயம் உள்ளது. திகாமடுவ திருகோணமலை மட்டுமல்ல மட்டக்களப்பு வவுனியா யாழ்ப்பாணத்திலும் தமிழ் உறுப்பினர் தெரிவு சிக்கலுக்குள்ளாகலாம்.
1214 முதல் 1621 வரை 410 ஆண்டுகள் உலகு கண்ட யாழ்ப்பாண அரசின் இறைமையை 1978 முதல் 2009 வரை மீளவும் தமிழீழத் தேசமாக உலகு கண்ட இறைமையை உலகுக்கு வெளிப்படுத்தும் தேர்தல் மேடையாகவாவது ஊடகங்களும் மக்களும் இந்தச் சிறிலங்காப் பாராளுமன்றத் தேர்தல் மேடையைப் பயன்படுத்தினால் அதற்கு தூண்டல் தரும் யாராவது வேட்பாளர் இனங்காணப்பட்டால் அவருக்கு மக்கள் வாக்களிக்க உதவியாக அமையும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணம்.




