இஸ்ரேலினால் தடுக்க முடியாத  ஈரானின் ஆயுதங்கள்-வேல்ஸில் இருந்து அருஸ்

கடந்த செவ்வாய்க்கிழமை(1) இரவு ஈரான் இஸ்ரேல் மீது கடும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்க புலனாய்வுத்துறையினாலும், இஸ்ரேலிய மொசாட்டினாலும் முன்கூட்டியே தாக்குதல் திட்டத்தை அறிய முடியாதவாறு ஏவுகணைகளை நகர்த்திய ஈரான் ஒரு அதிர்ச்சிகரமான தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் முக்கிய நகரமான ரெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல நகரங்களில் இருந்த படை நிலைகள் மீது ஏவுகணைகள் சரமாரியாக வீழ்ந்து வெடித்ததை காணொளிகள் மூலம் பார்க்கக்கூடியதாக இருந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் 1864 இடங்களில் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டதுடன், மக்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியதையும் காணக்கூடியதாக இருந்தது.

தனது உண்மையான வாக்குறுதி- 2 படை நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளதாகவும், 90 விகிதமான ஏவுகணைகள் இலக்குகளை தாக்கி அழித்துள்ளதாகவும் ஈரான் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துமாக இருந்தால் இதைவிட மோசமான தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொள்ள நேரிடும் என ஈரானின் அதிபர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

ஈரானில் வைத்து கொல்லப்பட்ட ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ் மயில் ஹனியா, கடந்தவாரம் லெபனானில் கொல்லப்பட்ட ஹிஸ்பல்லாக்களின் தலைவர் சயீட் கசான் மற்றும் அவருடன் கொல்லப்பட்ட ஈரானின் ஜெனரல் ஆகியோருக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. தமது நாட்டை பாதுகாக்க தாம் தயாராக உள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

அதேசமயம் ரெல் அவிவ் பகுதியில் உள்ள இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொசாட்டின் தலமையகத்தை ஏவுகணை தாக்கியதாக சி.என்.என் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் தாக்குதலில் நவாடிம் வான்படைத் தளம் உட்பட இரண்டு வான்படைத்தளங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், நவாட்டின் வான்படைத்தளம் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை விமானங்களாக எப்-35விமானங்களில் தரிப்பிடம் எனவும் அதில் 20 விமானங்கள் முற்றாக அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு விமானத்தின் பெறுமதி 120 மில்லியன் டொலர் களாகும்.

மத்தியகிழக்கில் பைடன் அரசின் கொள்கையின் தோல்வியையே ஈரானின் பதிலடி காட்டுவதாக இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ரஸ்யாவின் வெளிவிவகார பேச்சாளர் மரியா சக்கரோவா தெரிவித்தள்ளார். அதேசமயம் இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய பிரதமர் பென்சமின் நெத்தனியாகு பதுங்கு குழியை நோக்கி அவசரமாக ஓடும் காட்சிகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி யுள்ளன.

இந்த தாக்குதல் என்பது இஸ்ரேலின் அயன் டோம் முற்றாக செயலிழந்துள்ளதையே காட்டு கின்றது அல்லது ஈரானிடம் நவீன தொழில்நுட்பம் உள்ளதை காட்டுவதாக பி.பி.சியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆனால் தாக்குதலுக்கு முன்னர் இஸ்ரேலின் அயன் டோமின் கணினிகளை ஈரான் சைபர் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்து விட்டதாக கூறப்படுகின்றது. தமக்கு இந்த தாக்குதல் தொடர்பில் முன்னர் தெரிந்திருக்கவில்லை என பென்ரகன் தெரிவித்தள்ளது. ஆனால் இறுதி நேரத்தில் தான் தாம் ரஸ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் தெரியப்படுத்தி யதாக ஈரான் தெரிவித்துள்ளதுடன், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை அமெரிக்கா தாக்கினால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் அனைத்தும் தாக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. பிரித்தானியா பிரதமர், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இந்த தாக்குதலை கண்டித் துள்ளன.

ஏப்பிரலில் இடம்பெற்ற தாக்குதலை விட இந்த தாக்குதல் இரண்டு மடங்கு பெரிதானது எனவும், ஈரான் 200 இற்கு மேற்பட்ட பலிஸ்ரிக் ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்காவின் பென்ரகனின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பற்றிக் தெரிவித்துள்ளார்.  மத்திய தரைக்கடலில் நின்ற தமது டிஸ் ரோயர் கப்பல்கள் ஈரானின் ஏவுகணைகளை முறி யடிப்பதற்கு 24 ஏவுகணைகளை ஏவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவை ஈரானின் ஏவகணைகளை தாக்கியதா என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்ராமர் ஆகியோர் இஸ்ரேலிய அதிபர் பென்சமின் நெத்தனியாகுவை தொடர்புகொண்டு பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு நிமிடத்தையும் பைடன் அவதானிப்பதாக அமெரிக்க வெள்ளைமாளிகைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஈரான் நவீன பலிஸ்ரிக் ஏவுகணைகளை (Ballistic missiles) ஏவியதாக intelligence consultancy firm Armament Research Services (ARES) என்ற அமைப்பின் ஆய்வாளர் Patrick Senft தெரிவித்தள்ளார். இந்த ஏவுகணைகள் குரூஸ் ஏவுகணைகளை விட இலக்குகளை மிக விரைவாக எட்டிவிடும். அதிக வேகம் காரணமாக இந்த ஏவுகணைகளை தடுப்பது என்பது கடினமானது.

இஸ்ரேலிடம் மூன்று அடுக்கு வான் பாதுகாப்பு பொறிமுறை உள்ளது. முதலாவது அயன்டோம் இது தரையில் இருந்து 10 கி.மீ உயரத்தில் வைத்து உந்துகணைகளை தடுக்கும் சக்தி கொண்டது. அதன் தூரவீச்சு 70 கி.மீ. இரண்டாவது டேவிட் ஸ்லிங் வகை ஏவுகணை இது இருந்து 15 கி.மீ உயரத்தில் வைத்து இடைத்தர தூரவீச்சு ஏவுகணைகளை தடுக்கும் சக்தி கொண்டது. அதன் தூரவீச்சு 300 கி.மீ. மூன்றாவதான அரோ ஏவுகணைத் தொகுதி இது இருந்து 100 கி.மீ உயரத்தில் வைத்து பலிஸ்ரிக் ஏவுகணைகளை தடுக்கும் சக்தி கொண்டது. அதன் தூரவீச்சு 2,400 கி.மீ.ஆனால் ஈரான் தனது பற்றா-1 மற்றும் பற்றா-2 என்ற கைப்பசொனிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலின் அரோ ஏவுகணைகளை தாக்கி அழித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த ஏப்பிரல் மாதம் ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களை விட இந்த வாரம் மேற்கொண்ட தாக்குதல்களில் பயன்படுத்திய ஏவுகணைகள் அதிகளவில் இலக்குகளை தாக்கியுள்ளதாக Missile Defense Project at the Center for Strategic and International Studies (CSIS) என்ற அமைப்பின் அதிகாரியான மார்க் கன்சியன் தெரிவித்துள்ளார். அதாவது இந்த தாக்குதல் மூலம் ஈரான் மூன்று விடையங்களை கூறியுள்ளது. ஒன்று இஸ் ரேலின் வான்பாதுகாப்பை ஈரான் இலகுவில் உடைத்துவிடும். இரண்டாவது இஸ்ரேலின் எந்த பகுதியையும் தாக்கும் வல்லமை ஈரானுக்கு உண்டு. மூன்றாவது ஈரானிடம் அணுவாயுதம் இருந்தால் அதன் மூலம் இஸ்ரேலை தாக்குவதற்கும் ஈரானினால் முடியும் என்பது தான் அது. அதாவது ஈரானின் தொழில்நுட்ப வளர்ச் சியை இஸ்ரேலும், மேற்குலகமும் தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விலையை செலுத்த வேண்டும் என்பதே யதார்த்த மானது.