இந்தியாவையும் சீனாவையும் இணைத்து பயணிக்கும் அனுராவின் திட்டத்தை இந்தியா ஏற்குமா?
புதிய அதிபர் அனுராவின் பார்வை அல்லது அவரது கட்சியின் பார்வை கடந்த காலத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் இருந்தாலும் அது தற்போதைய பார்வையை எதிரொலிக்கும் என்று சொல்ல இயலாது. இன்றைய நிலையில், இலங்கையின் புதிய அரசின் முன் உள்ள சவாலாக பொருளாதார நெருக்கடி இருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு கூடுதலாக அரசியல் தீர்வு என்ற நெருக்கடி உள்ளது. தமிழர்கள் தொடர்பான தீர்வு உடனடியாக கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. ஆனால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவையும் சீனாவையும் இணைத்து பயணிப்பது புதிய அதிபருக்கு முதற்தேவையாக உள்ளது.
இந்தியா ஏற்கிறதோ இல்லையோ அது இலங்கைக்கு அவசியமற்றது, புவிசார் சூழலில் இலங்கையின் புதிய அரசு தன்னுடைய அவசியத்தை வலியுறுத்தி தனக்கான காரியங்களை சாதிக்கும் என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்து. புவிசார் சூழலும் அதையே உணர்த்துகிறது. இந்தியாவுக்கான பிரதான ராஜதந்திர தேவை என்பது இலங்கையை சீனாவுக்கான ராணுவ – வார்த்தக மையமாக அனுமதித்து விடக்கூடாது. உதாரணத்துக்கு, பப்பு நியூ கினியாவில் ஆதிக்கம் செலுத்த எண்ணும் சீனாவின் முயற்சியினை எவ்வாறு ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இப்படி பல உதாரணங்கள் உண்டு. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியது என்றால் அது இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகளின் உறவுகளில் மட்டுமல்ல, உலக ஒழுங்கை மாற்றி அமைக்கும் உந்துதலை சீனாவுக்கு வழங்கக்கூடும் என்ற புவிசார் அச்சம் இருக்கிறது. அதைப்போல் இந்தியா-இலங்கை இடையே சிக்கலாக உள்ள கச்சத்தீவு விவகாரம், மீனவர்கள் சிக்கல், இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகள் என்பதெல்லாம் தொடர்ந்து பின்வரிசை விவாதமாகவே தொடரக்கூடிய சூழ்நிலை உள்ளது.
இந்திய முதலீட்டை பாதுகாப்பது, ராஜதந்திர நட்புறவில் பிடி தளராமல் தொடர்வது ஆகியவற்றுக்கே இந்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட விவகாரத்தை திமுக/காங்கிரஸ்க்கு எதிரான விவாதப்பொருளாக மோடி அரசு முன்னெடுத்தது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கூட அவ்வாறு கச்சத்தீவு வழங்கப்பட்டதை எல்லாம் மிக கடுமையாக சாடியிருந்தார்.
தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு அதுவே முக்கிய காரணமாக பாரதிய ஜனதா கூறியது. இதையெல்லாம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் புதிய இலங்கை அரசிடம் பேசுவாரா என்ற கேள்வி எழுவது எதார்த்தமான சிந்தனை என்றாலும் அவையெல்லாம் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. அதே போல், ஈழத்தமிழர்கள் அரசியல் தீர்வு பற்றிய ராஜதந்திர விவாதமும் பின்வரிசை பேசுப்பொருளாகவே இருக்கக்கூடும். இந்தியாவின் தேவை என்பது ‘இலங்கை’ சீனாவின் பக்கம் முழுமையாக சாயக்கூடாது, அல்லது சீனாவை ராணுவ/வர்த்தக முக்கியத்துவமிக்க திட்டங்களுக்குள் பிரதானமாக இணைக்கக்கூடாது என்பது தான், அந்த தேவையை புதிய அதிபர் அனுரா எப்படி அணுகுவார் என்பதை அறிய நாம் காத்திருந்தாக வேண்டும்.