நாட்டை பிளவுப்படுத்தும் சமஷ்டியாட்சிக்கு ஒருபோதும் இடமளில்லை: தாயக மக்கள் கட்சி தெரிவிப்பு

நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டை பிளவுப்படுத்தும் சமஷ்டியாட்சி முறைமை உருவாக்கத்துக்கு ஒருபோதும் இடமளில்லை என தாயக மக்கள் கட்சியின் தலைவர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான தலைமையிலான தாயக மக்கள் கட்சியின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவும், பிரதி தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமனவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் திலதி ஜயவீரவினால் புதன்கிழமை (2) நியமிக்கப்பட்டனர்.

இந்த நியமனத்தை தொடர்ந்து தாயக மக்கள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் புதன்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டதாவது,

இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டுக்காக எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம். ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்தில் சமஷ்டியாட்சி அரசியலமைப்பு முறைமையை உருவாக்குவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாட்டின் ஒற்றையாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.