ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு பின்னர் இலங்கை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்து மூலமாக விரிவான அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு முதல் நாளில் விவாதம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான பிரேரணையை முன்னகர்த்த வேண்டாம் எனக் கோரியுள்ளது.
இந்த விவாதத்துக்குப் பின்னர் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு இணையான நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு, ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க பதிலளித்து உரையாற்றவுள்ளதோடு விவாதங்கள் மற்றும் இணைநிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிய கிடைக்கின்றது.