கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளதுடன் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது என தெரிவித்துள்ளது.
கனடா நீதிமன்றம் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவித்ததை தொடர்ந்து இலங்கை கனடா செயற்பாட்டு கூட்டமைப்பு என்ற அமைப்பு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்த நிலையிலேயே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
கனடா அரசாங்கம் தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் செயற்படுகின்றது,கருத்துசுதந்திரம் சமத்துவ உரிமைகளை மீறுவதாக தெரிவித்திருந்த இலங்கை அமைப்பு தமிழ் இனப்படுகொலை குறித்த மாற்றுக்கருத்துக்களை முடக்குவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது.
எனினும் அந்த அமைப்பின் வேண்டுகோளை நிராகரித்துள்ள ஒன்ராரியோ மேல்முறையீட்டு நீதிமன்றம் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது அது பாரபட்சமான தாக்கங்களை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளது.
இந்த சட்டம் சிங்களபௌத்தர்களிற்கு எதிரான வெளிப்படையான இனவேறுபாட்டை கொண்டுள்ளது எனக்கூறப்படுவதை நாங்கள் நிராகரிக்கின்றோம், என கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.