அனுரகுமரவின் கும்பல் அதிகாரத்தை கைப்பற்றினால் இலங்கையில் இரத்தக்களரி ஏற்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க எச்சரித்துள்ளார்.
நாடு முன்னோக்கி செல்லும் ஒவ்வொரு முறையும் மக்கள் விடுதலை முன்னணி நாட்டை பின்னோக்கி நகர்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திவுலபிட்டிய, கட்டான பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரசன்ன ரணதுங்க,
ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்ததில்லை. அவர் எப்போதும் இரண்டாவதாகவே இருந்தார். இம்முறை இரண்டு வருடங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
நாடு மிகவும் மோசமான நிலையில் இருந்தபோது குறுகிய காலத்தில் தனது சர்வதேச உறவுகளை பயன்படுத்தி நாட்டை கட்டியெழுப்பினார். தொங்கு பாலத்தில் பயணிக்கும் எம்தை காப்பாற்ற அவர் தேவை. அதனால்தான் நாங்கள் ஒன்றாக இணைந்தோம்.
இந்த நாட்டை எப்போதும் பின்னோக்கி கொண்டு சென்றது ஜே.வி.பி தான். 2022 ஆம் ஆண்டு வீடுகளுக்கு தீ வைத்து கொடூரத்தை நாட்டில் விதைத்தது அனுரகுமார திஸாநாயக்கவின் தலைக்கவச கும்பல்தான்.
இவ்வாறானதொரு குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படுமானால் நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஏற்படும். எனவே இம்முறை மிகவும் கவனமாக வாக்களிக்க வேண்டும். தனது 3 சதவீத வாக்குகள் 40-50 சதவீதமாக அதிகரிக்கும் என அனுரகுமார நினைக்கிறார். அது நடக்காது. ஒரு வாக்கை எவ்வளவு கடின உழைப்பை செலுத்த வேண்டும் என அரசியல்வாதிகளாகிய எங்களுக்கு தான் தெரியும்.” என்றார்.