இந்திய நிதியுதவியின் கீழ்( Hybrid Power Projects )நைனாதீவு மற்றும் அனலை தீவுகளில் கலப்பின மின் திட்டங்கள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பான முதல் கட்டணத்தை இந்தியா உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஷாவினால் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷா ஜயவர்தன மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் சேபாலா ஆகியோரிடம் இது கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இந்த திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2022 மார்ச்சில் இலங்கையும் இந்தியாவும் கையெழுத்திட்டன.
இதையடுத்து மார்ச் 1, 2024 அன்று இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை மற்றும் யூ சோலார் கிளீன் எனர்ஜி (U-Solar Clean Energy) நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பிறகு, தீவுகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது.
தற்போது, ஆரம்ப கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இலங்கையிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா 11 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்துள்ளது.



