இன நெருக்கடிக்கு தீர்வு : ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை

இலங்கையின் இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுமாறு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களிடமும் மத அமைப்புக்களினதும் சிவில் சமூக அமைப்புக்களினதும் உறுப்பினர்களும் கல்விமான்கள் சமூகத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள்  கொள்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் பல மாதங்களாக நடத்திய விரிவான கலந்தாலோசனைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் இலக்குகளை வேட்பாளர்கள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்குவதற்காக அவர்களிடம் கையளிக்கப்படவிருக்கிறது. அத்துடன் தேர்தல் முடிவு எத்தகையதாக இருந்தாலும் அந்த இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என்று வேட்பாளர்களிடம் கோரப்படுகிறது.

அரசியல் தீர்வொன்றை நோக்கிய தேசிய பேச்சுவார்த்தைக்கான ஒரு தொடக்கப்புள்ளியாக “இமாலயப் பிரகடனத்தை” உருவாக்கிய பௌத்த பிக்குகள் மற்றும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் உறுப்பினர்களினால் 2023 ஏப்ரலில் முன்னெடுக்கப்பட்ட முன்முயற்சி உட்பட வேறு பல முன்னெடுப்புக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.

குறிக்கோள்கள் 

அரசியல் கட்சிகள், துறைசார் நிபுணர்கள் அமைப்புக்கள் மற்றும் அக்கறையுடைய ஏனைய குழுக்களை உள்ளடக்கி அறிக்கைக்கான ஆதரவை விரிவுபடுத்தல்.

பிரதான ஜனாதிபதி  வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துதல்.

கீழே விபரிக்கப்படும் கொள்கைகளையும் செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஆதரவு தருவதாக உறுதியளிக்குமாறு வேட்பாளர்களிடம் கோருதல்.

நடைமுறைப்படுதல் தொடர்பான செயற்பாடுகளை   முன்னெடுக்குமாறு புதிதாக தெரிவாகும் ஜனாதிபதியிடம் கோருதல்.

1) அதிகாரப் பகிர்வு

பிராந்தியங்களுக்கு சமநிலையான அதிகாரப்பரவலாக்கத்தையும்  மத்தியில் ( செனட் – மேல்சபை) அதிகாரப்பகிர்வையும் உறுதிப்படுத்தி ஐக்கியத்தை மேம்படுத்துகின்ற அதேவேளை பிராந்திய சுயாட்சியை மதித்தல்.

சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்.

நாட்டின் சகல பாகங்களிலும் வாழ்கின்ற பிராந்திய சிறுபான்மையினத்தவர்களுக்கு இது பொருந்தும்.

இனத்துவ மற்றும் மத ரீதியான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த நிர்வாக மாவட்ட எல்லைகளை நிர்ணயம் செய்து ஒழுங்கமைத்தல்.

காணி ஆணைக்குழு ஒன்றின் ஊடாக தேசிய காணிக்கொள்கையை நடைமுறைக்கு கொண்டுவருவதுடன் அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தில் குறித்துரைக்கப்பட்டிருப்பதன் பிரகாரம், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்தல்.

பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாற்றுதலும் (Transfer) பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் பட்டியில் தலையீடு செய்வதை நிறுத்துவதும் பெருமளவிலான உள்ளூராட்சி மற்றும் சுயாட்சிக்கு வசதியாக பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்கள் சகலவற்றையும் பரவலாக்கம் செய்து மாகாண சபைகளுக்கு வலுவூட்டுதல்.

ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து மாகாண சபைகள் தேர்தலையும் உள்ளூராட்சி தேர்தல்களையும் மேலும் தாமதிக்காமல் நடத்துதல்.

2) நிலைமாறுகால நீதி

நிலைமாறுகால நீதியின் சர்வதேச நியமங்களின் பிரகாரம் போரின் விளைவான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது. இவற்றில் காணாமல் போனவர்கள், கைதிகள், இழப்பீடு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் உட்பட மனித உரிமைமீறல்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவை அடங்கும்.

ஒப்புரவான இராணுவப் பிரசன்னம், துருப்புக்களின் மட்டங்களை வழமைநிலைக்கு கொண்டுவருவதுடன் வழமை நிலை மற்றும் பாதுகாப்பு உணர்வை வளர்ப்பதற்காக வடக்கிலும் கிழக்கிலும் உள்ள ஆயுதப்படைகளின் பிரசன்னம்  ஏனைய பிராந்தியங்களுக்கு விகிதப் பொருத்தமான முறையில் பேணப்படுவதை உறுதிசெய்தல்.

பொலிஸ் நடைமுறைகளை தரப்படுத்துதல் – வடக்கிலும் கிழக்கிலும் பொலிஸ் செயற்பாடுகள் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளதைப் போன்று ஒரே தராதரத்திலும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துதலும் அதே பிராந்தியங்களில் இருந்து பொலிஸுக்கு ஆட்திரட்டல்கள் செய்வதும்

மலையக தமிழ்ச் சமூகத்துக்கு நிலைமாறுகால நீதிக் கோட்பாடுகளை பிரயோகித்தல் –  இலங்கை சுதந்திரமடைந்த நேரத்தில் குடியுரிமை பறிக்கப்பட்ட மலையக தமிழ்ச் சமூகம் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும்  மிகவும் மோசமாக பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுகின்ற ஒரு சமூகமாக இருக்கிறார்கள். சமூக ரீதியிலும் ஓரங்கட்டப்பட்ட சமூகமாக இருக்கும் அவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட படுமோசமான மனித உரிமைமீறல்களுக்காக இழப்பீட்டைப் பெறவில்லை.

மலையக தமிழ் மக்களுக்கு காணியையும் வீட்டையும் வழங்குதல் – அவர்கள் கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு வசதியாக போதுமான நிலத்துடன் வீட்டுரிமை வழங்கப்பட வேண்டும்.

3) சமத்துவமான பாதுகாப்பு

மத ரீதியான மரபுரிமையை பாதுகாத்தல்; ஒரு மதத்தை பின்பற்றும் மக்களின் வணக்கத்தலங்களை மற்றைய மதங்களைச் சேர்ந்தவர்களின் அத்துமீறலில் இருந்தும் அபகரிப்பில் இருந்தும் பாதுகாத்தல்; கலாசார மற்றும் மத அடிப்படையிலான பல்வகைமையை பேணிக் காத்தல்; மத ரீதியான சமூகங்களின் பன்முகத்தன்மையையும் பல்வகைமையையும் அவர்கள் வாழும் பகுதிகளில் உள்ளக மதப் பாரம்பரியங்களையும் மதித்தல்.

மக்களிடம் நிலத்தை மீளக் கையளித்தல் – போரின்போது மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திருப்பிக் கையளிப்பதுடன் மக்களின் பயன்பாட்டுக்கு வீதிகளைத் திறந்துவிடவேண்டும்.

மொழிச் சமத்துவத்தை நடைமுறைப்படுத்தல் – சகல சமூகங்களினதும் மொழி உரிமைகளை உத்தரவாதப்படுத்த உத்தியோகபூர்வ மொழிகள் சட்டம் பயனுறுதியுடைய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்தல்.

சாதிப் பாகுபாட்டுக்கு முடிவு கட்டுதல் –  சமத்துவத்தையும் சமூக நீதியையும் உறுதிப்படுத்துவதற்கு நாடு பூராவும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல்.

அரச துறையிலும் தனியார் துறையிலும் தொழில்வாய்ப்பை மேம்படுத்துதல் – இன, மத சமூகங்களுக்கு அரச துறையிலும் தனியார் துறையிலும் தொழில்வாய்ப்புக்களை சமத்துவமான முறையில் வழங்கவேண்டும். அத்துடன் பொருளாதாரத்தில் ஒப்புரவான நிலையை உறுதிப்படுத்த பாரபட்சங்களை இல்லாதொழித்தல்.

பொருளாதார நல்வாழ்வுக்காக சமத்துவமான முறையில் அரச வசதிகளைப் பெறுதல் – பொருளாதார வளர்ச்சியையும் புதிய தொழிற்றுறை முயற்சிகளையும் ஊக்குவிக்க ஏனைய பிராந்தியங்களுடன்  சமத்துவமான முறையில் வடக்கிலும் கிழக்கிலும் தொழில் முயற்சிகளை தொடங்குவதற்கு நிதி வசதிகளை வழங்குதல்.

மலையக தமிழர்கள் இடம்பெயர்ந்து வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற மலையக தமிழர்களுக்கு எந்தவிதமான பாரபட்சமும் இன்றி காணி உரிமைகளும் ஏனைய அரசாங்க சேவைகளுக்கான உரித்தும் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்து ஆதரவளித்தல்.

4) நல்லாட்சி

நீதித்துறையை வலுப்படுத்துவதன் மூலமும் சட்டத்தின் ஆட்சியை மதித்துச் செயற்படுவதன் மூலமும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதுடன் சகல மட்டங்களிலும் ஊழலுக்கு  முடிவு கட்டி வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல்.

அரசுக்கும் மக்களுக்கும் இடையிலும் அரசியல் கட்சிகள் மற்றும் மதச் சமூகங்களுக்கு இடையிலும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நிறுவனங்களை உருவாக்கி மேம்படுத்தல்.

பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் ஓரங்கட்டப்படும் மக்களை பாதுகாக்கும் அதேவேளை  நிலைபேறான அபிவிருத்தியை உறுதிசெய்தல்.

சுயாதீனமான நிறுவனங்களை உருவாக்குதலும் அமைச்சுக்களுக்கான நிரந்தர செயலாளர் பதவிகளை மீண்டும் உருவாக்கி அரசாங்க அதிகாரிகளின் பதவிக் காலத்துக்கு பாதுகாப்பை வழங்குதல்.

மனித உரிமைகள் உடன்படிக்கைகளையும் ஐக்கிய நாடுகள் முறைமையின் தீர்மானங்களையும் மதித்துச் செயற்படுவதன் மூலமாக சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுதல்.

தேசிய நலன்களையும் விழுமியங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான சமநிலையான வெளியுறவுக் கொள்கை வகுப்பதுடன் இலங்கையின் அணிசேரா பாரம்பரியத்தையும் பாதுகாத்தல்.

இந்த அறிக்கையில் வண. கலாநிதி மாதம்பகம அசஜி மகாநாயக்க தேரர், வண களுபஹன பியரத்ன தேரர், வணபிதா சி.ஜி. ஜெயக்குமார், முன்னாள் ஆயர் அசிறி பெரேரா, ஏ.டபிள்யூ. ஹல்மி அஹமட், கலாநிதி வின்யா ஆரியரத்ன, பேராசிரியர் பசீஹா அஸ்மி, விசாகா தர்மதாச, எஸ்.எஸ்.சி. இளங்கோவன், பேராசிரியர் ரி. ஜெயசிங்கம், கலாநிதி எஸ்.ஜீவசுதன், வி. கமலதாஸ், நிரஞ்சன், கலாநிதி தயானி பனாகொட, கலாநிதி ஜெகான் பெரேரா, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பேராசிரியர் காலங்க ரியூடர் சில்வா,  பேராசிரியர் எஸ். சிவகுமார், கலாநிதி சண்முகராஜா ஸ்ரீகாந்தன், கலாநிதி ஜோ வில்லியம் ஆகியோர் கைச்சாத்திட்டிருக்கிறார்கள்.