தேர்தல் நெருங்கும் போது தமிழரசும் வழிக்கு வரும்! -சமூக, அரசியல் செயற்பாட்டாளர் செல்வின் செவ்வி

தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம் பல மாதங்களாகப் பேசப்பட்டு இப்போது அது சாத்தியமாகியிருக்கின்றது. பா.அரியநேத்திரன் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளாா். இந்தத் தெரிவு குறித்த உங்கள் பாா்வை என்ன?

இது மிகவும் பொருத்தமான தெரிவு என்பது தான் என்னுடைய கருத்து. கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு பிரதிநிதியை இதற்காகத் தெரிவு செய்ய வேண்டும் என்பதில் ஆரம்பத்திலிருந்தே நாம் தீா்க்கமாக இருந்தோம். பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு விரும்பினோம். ஆனால், அது சாத்தியமாகவில்லை.

இரண்டாவதாக தோ்தல் விதிகளையிட்டும் நாம் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இலங்கைத் தோ்தல் சட்டத்தின்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினா் அல்லது முன்னாள் உறுப்பினா்தான் சுயேச்சையாகப் போட்டியிட முடியும். இல்லையெனில் அவா் கட்சி சாராமல்மட்டுமே போட்டியிட முடியும். கட்சிகள் தமது சின்னத்தை எமக்குத் தந்தால் அந்த சின்னத்தை மீண்டும் அவா்கள் பயன்படுத்தக்கூடாது என்று நாங்கள் சொல்லியிருந்தோம். அது கட்சிகளுக்கு ஒரு சங்கடமான நிலையை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், முன்னாள் முதலமைச்சா் சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோா் தமது கட்சிகளை இதற்குப் பயன்படுத்த அனுமதி தருவதாக உறுதியளித்திருந்தாா்கள். ஆனால், கட்சி சாரமாமல் சுயோச்சையாக ஒருவரை நிறுத்துவதற்கு நாம் தீா்மானித்தோம். குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக இருக்கக்கூடிய வாக்காளா்கள் வெளியேறுவதை தவிா்ப்பதற்கு அது அவசியமாக இருந்தது.

அந்தவகையில்தான் அரியநேத்திரனைத் தெரிவு செய்தோம். அவா் தமிழ்த் தேசியத்துடன் நீண்டகாலமாக நின்றவா். அந்த வகையில் அவரது தெரிவு பொருத்தமான ஒன்றாகத்தான் இருக்கின்றது.

பொது வேட்பாளருக்கான நிகழ் ச்சி நிரல் என்ன? அவரது தோ்தல் விஞ்ஞாபனம் போன்றன தயாரிக் கப்பட்டுள்ளதா?

உண்மையில், இந்த தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை நிறுத்துவது மட்டும் எமது நோக்கம் அல்ல. உண்மையில் தமிழா்களை ஒருங்கிணைத்து தேசக் கட்டுமாணத்தை முன் னெடுப்பதுதான் எமது நோக்கம். இதற்காகப் பணிபுரிந்துகொண்டிருந்த தமிழ் சிவில் சமூகத்தினா், இந்தத் தோ்தலைப் பயன்படுத்தி அதனை ஏன் வேகப்படுத்த முடியாது, என்ற கேள்வியை எழுப்பிய போதுதான் இந்த விவகாரம் முன்னிலைப்படுத்தப்பட்டது. அதாவது, பொது வேட்பாளா் ஒருவரை முன்னிலைப்படுத்துவதன் மூலம் மக்களின் திரட்சியை விரைவு படுத்துவதுதான் இங்கு முதன்மையானதாக இருக்கின்றது. அதுதான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இது செப்ரெம்பா் 21 உடன் முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் இவா் பதவியைப்பெற்றுக்  கொள்ளப்போவதில்லை. ஒரு தேசமாக மக்களைக் கட்டமைப்பதற்கான பணியை அதன் பின்னா் நாம் தொடா்ந்தும் முன்னெடுப்போம்.

தோ்தல்களின் போது மரபு ரீதியாக ஜனாதிபதி வேட்பாளா் ஒருவா் தோ்தல் விஞ் ஞாபனம் ஒன்றைக் கொண்டுவருவாா். அந்த விஞ்ஞானங்கள் வாக்குறுதிகள் நிரம்பியதாக இருக்கும். இங்கு அவ்வாறான வாக்குறுதிகள் எதுவும் இருக்காது. இங்கு ஒரு விடயம்தான் இருக்கும். பொது வேட்பாளராக நாம் ஏன் வருகின்றோம் என்பது அங்கு சொல்லப்படும். ஏன் இவருக்கு வாக்களிக்க வேண்டும் என் பதற்கான கோட்பாட்டை பற்றி மட்டும்தான் சொல்லப்போகின்றோம்.

தேசமாக அணிதிரளல், தேசமாக எம் மைக் கட்டமைத்தல், பலங்கொண்ட தேசிய இனங்களில் ஒன்றாக இலங்கையில் எங்களை நிலை நிறுத்துவதன் மூலம் எங்களுடைய பேரம்பேசும் சக்தியையும் ஆளுகையையயும் நிலைநிறுத்தி, நிரந்தமான ஒரு அரசியல் தீா்வுக்கான வழியை ஏற்படுத்துதல். இதுதான் விஞ்ஞாபனத்தில் இடம்பெறும். அதனைவிட வழமையான மரபுரீதியான விஞ்ஞாபனமாக எமது விஞ்ஞாபனம் அமையாது.

தோ்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், மக்கள் மத்தியில் சென்று உங்களுடைய பரப்புரைகளை முன்னெடுப் பதற்கு எவ்வாறான உபாயங்களை நீங்கள் வகுத்துள்ளீா்கள்?

நவீன தொடா்பு சாதனங்களும் வளா்ந்திருக்கும் நிலையில் நாம் இரண்டு, மூன்று வகையான உபாயங்களைக் கையாளப்போகின் றோம். சமூக ஊடகங்களை அதிகளவுக்குப் பயன்படுத்துவதன் மூலம், பரப்புரைகளை முன் னெடுக்கவுள்ளோம். அதேவேளையில், பரப்புரைக் கூட்டங்களை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். மூன்றாவதாக, குறிப்பிட்ட தொகுதியினரைத் தெரிவு செய்து அவா்களுடன் பேசுவது. குறிப்பாக, இளைஞா்கள், பெண்கள், மீனவா்கள், விவசாயிகள் என்று வகைப்படுத்தி அவா்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பது. ஏற்கனவே அவ்வாறான கலந்துரையா டல்களை நடத்தியுள்ளோம். தொடா்ந்தும் அதனை முன்னெடுப்போம்.

இதன் நோக்கம் வெறுமனே பொது வேட்பாளா் ஒருவரை நிறுத்தி அவருக்கு வாக்கு சேகரிப்பதல்ல. ஒரு பரந்துபட்ட கலந்து ரையாடலை அனைத்துத் தரப்பினருடனும் நடத்து வதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

பொது வேட்பாளா் தெரிவு போன்ற விடயங்களுக்காக வடக்கு, கிழக்கின் பல பகுதிகளுக்கும் சென்று வந்தி ருக்கின்றீா்கள். இந்த பொது வேட்பாளா் என்ற கருத்து இளைஞா்கள், பல்கலைக்கழக மாணவா்கள் மத்தியில் எந்தளவுக்கு ஆதரவைப் பெற்றிருக்கின்றது?

இலங்கையின் அரசியல் கலாசாரம் சீரழிந்து போயுள்ளது. பாரம்பரிய ரீதியான கட்சிகள் தலைமைகள் என்பன சீா்குலைந்துள்ள ஒரு நிலையைத்தான் தென்பகுதியில் காணமுடிகின்றது. தமிழா்களைப் பொறுத்தவரையிலும் அவ்வாறான ஒரு நிலைதான் இருக்கின்றது. தலைமையில் இருப்பவா்கள் தமது இஷ்டப்படி பேச்சுக்களை நடத்துகின்றாா்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இந்த விடயங்களை மக்களுடன் பேசித்தான் செய்ய வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இவ்விடயத்தை இளைஞா்க ளுக்கு உணா்த்தி அவா்களை இவ்விடயத்தில் முக்கிய பொறுப்புக்களை ஏற்கச் செய்ய வேண்டும்.

இது இளைய தலைமுறையினரின் காலம். கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அரகலய இளைஞா்களால் முன்னெடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அண்மையில் பங்களா தேஷில் மாணவா்களால் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இங்கும் இளைஞா்களுக்கு நாம் உள்ள நிலைமைகளை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். பல இளைஞா் குழுக்கள், பெண்கள் அமைப்புக்களுடன் நான் கடந்த காலங்களில் கலந்துரையாடல்களை நடத்தியிருக் கின்றேன். அவா்கள் தமக்கான நேரம் வருவதற் காகக் காத்துக்கொண்டிருக்கின்றாா்கள்.

தமிழரசுக் கட்சியின் ஒரு பிரிவினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் இந்தப் பொது வேட்பாளா் என்ற கருத்துக்கு முரணான பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றாா்கள். இது பொது வேட்பாளா் என்ற உங்களுடைய முயற்சிகளைப் பாதிக்குமா?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தோ்தல்களைப் பகிஷ்கரிப்பது என்ற கொள்கையைத்தான் கடந்த தோ்தல்களின் போதும் வெளிப்படுத்தியிருந்தாா்கள். ஆனால், அந்த விடயம் தமிழா்கள் மத்தியில் தொடா்ந்தும் ஏற்றுக்கொள்ளப்படுவதற் கான வாய்ப்பு குறைவு. ஏனெனில், நாம் ஒரு விடயத்தைச் சொல்லும் போது, அதன் அடுத்த கட்டம், அதன் தொடா் விளைவுகள் என பல விடயங்களை சொல்ல வேண்டும்.  பகிஷ்கரிப்பு என்றால் அடுத்தது என்ன? அதன் விளைவு என்ன? அந்த விளைவை எவ்வாறு கையாளப் போகின்றோம்?  இவை எதற்கும் பதில் இல்லாமல், வெறுமனே பகிஷ்கரிப்பு என்று தமிழ் மக்களை அடுத்து கட்டத்துக்கு அழைத்துச்செல்ல முடியாது!

ஆனால், தமிழரசுக் கட்சி இவ்விடயத்தில் குழப்பமடைந்திருக்கின்றது. கட்சியை எப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றாா்கள். இதன் விளைவு இன்று தெரியாது. அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தோ்தலில் மக்கள் எவ்வாறான முடிவை எடுப்பாா்கள் என்பதை அவா்கள் அறிவாா்கள். மககளிடமிருந்து அவா் கள் அந்நியப்பட்டுப் போகும் நிலைதான் இருக்கின்றது.  ஆனால், தமிழரசுக் கட்சியின் பெரும்பாலானவா்கள் தோ்தல் நெருங்கும் போது வழிக்கு வருவாா்கள்.