ஊடகத்துறையினர் மீதான யாழ் மருத்துவமனையின் வன்முறை கண்டனத்திற்குரியவை…

யாழ் மருத்துவமனைக்கு தனது சிகிச்சைக்காக சென்ற சுயாதீன ஊடகவியலாளர் தம்பி ஐயா கிருஸ்ணாந்த் மீது கடந்த ஜுலை மாத இறுதியில் யாழ்வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியும், அவரின் உதவியாளர் வைத்தியர் பிரணவனும் தமது தனிப்பட்ட விரோதம் காரணமாக அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ததுடன், சிகிச்சைக்கு சென்ற நோயாளியை அச்சுறுத்தியது மிகவும் கண்டனத்திற்கு உரியது என ‘இலக்கு’ ஊடகம் தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை(13) வெளியிடப்பட்ட அறிக்கையில் ‘இலக்கு’ ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வைத்தியர் அர்ச்சுணா வெளிக்கொண்டுவந்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் ஊழல்கள் தொடர்பில் பல ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவுகளையும், ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் வெளியிட்டு வருகின்றனர்.

இது அந்த மக்களின் இன்னல்களை வெளிக்கொண்டுவரும் ஒரு கருத்துச் சுதந்திரமான நடவடிக்கையாகும். கருத்து சுதந்திரம் என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும், அதேபோலவே ஊடக சுதந்திரம் என்பது ஊடகவியலாளர்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால் அந்த சுதந்திரத்தை இலங்கை காவல்துறையின் துணையுடன் யாழ் வைத்தியசாலை நிர்வாகம் முறைகேடாக பயன்படுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது.

அதிலும் குறிப்பாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றவரை தடுத்து வைத்து சட்டவிரோதமாக விசாரணைகளை மேற்கொண்டதுடன், அவரை இலங்கை காவல்துறை அதிகாரியின் உதவியுடன் மிரட்டியது என்பது அடிப்படை மனி உரிமை மீறலாகும்.

ஊடகவியலாளர் கிருஸ்ணாந்த்தாக்கு  விடுக்கப்பட்ட மிரட்டல் என்பது ஒட்டுமொத்த ஊடகத்துறையினரின் குரல்வளையை இலங்கை அரசுடன் இணைந்து யாழ் வைத்தியசாலை நிர்வாகம் அடக்க முற்படுவதையே காட்டுகின்றது.

ஒரு ஊடகவியலாளருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலையை எண்ணி நாம் அச்சமடைந்துள்ளோம். இலங்கை அரசின் அடக்கு முறைகளுக்கும் யாழ் வைத்தியாலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கும் இடையில் எம்மால் அதிக வேறுபாடுகளை காணமுடியவில்லை.

இந்த முறைகேடுகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் எமது மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும். எனவே யாழ் வைத்தியசாலை நிர்வாகம் தான் மேற்கொண்ட தவறுகளுக்கு சம்பந்தப்பட்ட ஊடகவியலாளரிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என்பதுடன், எதிர்வரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட வைத்தியசாலை நிர்வாகம் தமது தவறுகளை ஒப்புக்கொண்டு உடனடியாக பதவி விலகுவதுடன், நேர்மையான வைத்தியர்கள் எமது மக்களுக்கான சேவையை பொறுப்பெடுக்கவும் அனுமதிக்க வேண்டும்.

தமிழ் மக்கள் மீது இலங்கை அரசும் அதன் கைகூலிகளாக இயங்கும் யாழ் வைத்தியசாலை நிர்வாகமும் மேற்கொள்ளும் இந்த அடக்கு முறைகளுக்கு எதிராக தாயகத்திலும், புலத்திலும் இயங்கும் தமிழ் தேசிய ஊடகங்கள்  தமது கண்டனங்களை பதிவுசெய்ய வேண்டும் என்பதுடன், இலங்கை மனித உரிமைகள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு மற்றும் எல்லைகள்கடந்த ஊடகவியலாளர் அமைப்பு போன்வற்றில் இது தொடர்பான முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என இலக்கு ஊடகம் கேட்டுக்கொள்கின்றது.