ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொறுப்புக்கூறல் சார்ந்த செயற்பாடுகளை அரசாங்கத்தின் ஓரங்கமாகவுள்ள சட்டமா அதிபரிடம் கையளிப்பதைவிட, சுயாதீன சட்டவாதி ஒருவரை நியமிப்பதானது ஆட்சி நிர்வாகத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் மிகமுக்கிய நகர்வாக அமையும் என மனித உரிகைள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்திய பிரதிப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பில் உள்நாட்டு சஞ்சிகையொன்றின் கட்டுரையில் மீனாக்ஷி கங்குலி மேலும் கூறியிருப்பதாவது,
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் இராணுவத்தினரால் இழைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் குறித்து அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதை முன்னிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதை அரசாங்கம் தொடர்ச்சியாகக் காலந்தாழ்த்தி வந்திருக்கிறது.
நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர். இவ்வாறு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் நிலவிய குறைபாடு ஆட்சி நிர்வாகத்தின் சகல பகுதிகளுக்கும் வியாபித்தது. வன்முறைப்போக்கு, ஊழல் மோசடிகள் மற்றும் நிர்வாகத்திறனின்மை என்பன அரச வருமானத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், தீவிர பொருளாதார நெருக்கடிக்கும் தோற்றுவாயாக அமைந்தது.
மனித உரிமை மீறல் சம்பவங்களில் அரசியல்வாதிகளோ அல்லது பாதுகாப்புத்தரப்பினரோ தொடர்புபட்டிருப்பதாகக் கண்டறியப்படும் வேளையில், அதுகுறித்த சுயாதீன விசாரணைகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே நாட்டின் நீதித்துறையில் நிலவும் அரசியல் தலையீடுகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொறுப்புக்கூறல் சார்ந்த செயற்பாடுகளை அரசாங்கத்தின் ஓரங்கமாகவுள்ள சட்டமா அதிபரிடம் கையளிப்பதைவிட, சுயாதீன சட்டவாதி ஒருவரை நியமிப்பதானது ஆட்சி நிர்வாகத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் மிகமுக்கிய நகர்வாக அமையும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.