வறுமையும் மனித உரிமை மீறலும்-துரைசாமி நடராஜா

மலையக மக்கள் உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் உள்ளாகி வருகின்றனர். இந்நிலையானது இம்மக்களின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளதோடு மேலும் பல பாதக விளைவுகளுக்கும் அடித்தளமாகியுள்ளது.

இந்நிலையில் இம்மக்களுக்கான உரிமைகளை உரியவாறு உறுதிப்படுத்தி அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கு அர சாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தல் வேண் டும். இதனிடையே பெருந்தோட்ட மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி கண்டி, சமூக அபிவிருத்தி நிறுவகம் அண்மையில் மாத்தளையில் கவன யீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தி இருந்த தும் குறிப்பிடத் தக்கதாகும்.

‘உரிமைகள் மனித வாழ்வின் நிபந் தனைகள். பொதுவாக அவை இன்றி எம் மனிதனும் சிறப்பாக செயற்பட முடியாது. இந்நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவே இயங்கும் அரசு, உரிமைகளைப் பேணுவதன் மூலம் மட்டுமே தனது இலக்கினை அடைந்து கொள்ள முடியும்’ என்று தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றார் அறிஞர் லஸ்கி. இதே வேளை ‘ உண்மையான உரிமைகள் சமூகப் பொதுநலத்தின் நிபந்தனைகள். பல்வேறுபட்ட உரிமைகள் சமூகத்தின் ஒன்றுபட்ட அபி விருத்திக்காக நமது மதிப்பீடுகளுக்கு கடமைப் பட்டன’ என்கிறார் அறிஞர் ஹோபஸ். இந்த வகையில் தனிமனிதன், சமூகம், நாடு என்று எந்த நிலைகளை நோக்கிடினும் உரிமைகள் முக்கியத்துவம் பெற்று விளங்குவதனை அவ தானிக்கக் கூடியதாக உள்ளது.

உரிமை மழுங்கடிப்பு 

சமூகங்களின் அபிவிருத்தி என்பது உரி மைகளின் வெற்றியிலேயே பெரிதும் தங்கியுள்ளது. ஒரு சமூகத்தின் உரிமைகள் மழுங் கடிக்கப்படும்போது அச்சமூகம் வாய்ப்புகள் பலவற்றையும் இழக்க நேரிடுகின்றது. இதனால் அச்சமூகத்தின் நோக்கம் பாதிக்கப்படுவதாக வலியுறுத்தல்கள் இருந்து வருகின்றன.

இதேவேளை உரிமைகள் கையாளப் படுகின்றபோது சமூகநலன்நோக்கில் உபயோ கிக்கப்படுவது அவசியமானது என்பது புத்தி ஜீவிகளின் கருத்தாகவுள்ளது. இந்நிலையில் உரிமைகளை சிவில் உரிமைகள், அரசியல் உரிமைகள், பொருளாதார உரிமைகள் என்று வகைப்படுத்துகின்றனர். வாழ்வதற்கான உரிமை, கல்விக்கான உரிமை, மதவுரிமை, சிந்திப்பதற்கும், வெளிப்படுத்துவதற்கான உரிமை, ஒன்றுகூடும் உரிமை, சொத்துரிமை, சுதந்திரம், சமத்துவம் என்பன சிவில் உரிமைகளின் பாற்படும். வாக்களிக்கும் உரிமை, தேர்தல்களில் போட்டி யிடும் உரிமை, பதவியேற்கும் உரிமை, மனுச் செய்யும் உரிமை என்பன அரசியல் உரிமை களாகும். வேலைசெய்யும் உரிமை, தொழிற் சங்கம் அமைக்கும் உரிமை என்பன பொருளாதார உரிமைகளாகக் கருதப்படுகின்றன.

இவ்வாறாக உரிமைகள் குறித்து நாம் நோக்குகின்றபோது மலையக மக்கள் உரிமை களை அனுபவிக்கும் நிலை தொடர்பில் எம்மால் திருப்தி கொள்ள முடியவில்லை. காலங்காலமாக இம்மக்கள் உரிமைகள் பலவற்றையும் இழந்து கண்ணீர் சிந்தும் நிலைமையே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆரம்ப காலந்தொட்டே பெருந்தோட்டத் தமிழ் மக்கள் போதுமான வருமானமின்மை, தமது தனிமனித இயலுமைகளையும் ஆற்றல் களையும் மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பின்மை, மனித உரிமைகள் மறுக்கப்படுதல், தனிமைப்படுத்தப்படுதலும், ஒதுக்கி வைக்கப் படுதலும் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து வந்தனர்.

பெருந்தோட்டங்களோடு அவர்களைப் பிணைக்கும் வதிவிட மானிய முறையானது அவர்களிடையே தாம் ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. தோட்ட சமூகத்தினை நாட்டின் தேசிய நீரோட் டத்தோடு இணைத்துக் கொள்வதற்கான சிறந்த வழி இந்த வதிவிட மானிய முறையிலிருந்து அவர்களை விடுவிப்பதேயாகும் ‘ என்பது பேரா சிரியர் எம்.சின்னத்தம்பியின் கருத்தாக உள்ளது.

மனித உரிமைகள் மீறப்படும்போது அது மக்களிடையே உற்பத்திக் காரணிகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை, அதனால் ஏற்படும் குறைந்தமட்ட வருமானம், கல்வியையும் சுகா தார சேவைகளையும் முறையாக பெற்றுக் கொள்ள முடியாத நிலை போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் ஏற்படுத்தி வறுமையைத் தோற்றுவிப்பதாகவும் பேராசிரியர் சின்னத்தம்பி மேலும் சுட்டிக்காட்டுகின்றார். இந்தவகையில் மலையக மக்கள் நீண்ட காலமாகவே உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் முகம் கொடுத்து வந்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கதாகும்

எதிர்மறையான தாக்கம் 

தோட்டங்களின் முகாமைத்துவம் மலையகத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி குறித்து எதுவித அக்கறையும் செலுத்தாத ஒரு நிலையே காணப்பட்டது. இவர்களின் கல்வியுரிமை மீறப்

பட்டது. தோட்ட முகாமையாளர்கள் தொழி லாளர் கல்வியில் அக்கறை காட்டவில்லை என்பது மாத்திரமல்லாது, தொழிலாளர்களின் பிள்ளைகள் எவ்வித எழுத்தறிவையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தனர்.

பெருந்தோட்டக் கலாசாரத்தில் கல்வி யென்பது எதிர்மறையான தாக்கத்தினை ஏற் படுத்தக்கூடியது. தொழிலாளர் கல்வியை பெற்றுக் கொண்டால் தோட்டங்களின் மனித வலு வழங்கலில் பாதிப்பு ஏற்படும். எனவே தொழிலாளர்களின் பிள்ளைகள் எவ்வித கல்வி யையும் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் தோட்ட நிர்வாகத்தினர் மிகவும் கவனமாக இருந்ததாக பேராசிரியர் தை.தனராஜ் தனது நூலொன்றில் குறிப்பிடுகின்றார்.

1948 ம் ஆண்டு இந்திய வம்சாவளியினரின் பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பன பறிக்கப்பட்ட நிகழ்வு இம்மக்கள் மீதான மிகப்பெரிய உரிமை மீறலாகக் கருதப்படுகின் றது.  ‘எவ்வித வேலையுமற்ற சிங்களவர் ஒருவர் பிரஜாவுரிமையைப் பெறுவதற்கு தகுதியு டையவரானால் வருமானம் எதுவுமற்ற ஒரு இந்தியருக்கு ஏன் இந்த உரிமை விலக்கப்பட வேண்டும்? இத்தகைய அளவுகோல் மிக மோசமான வகுப்புவாத சார்புடையது அல்லவா? வகுப்புவாதச்சார்பு கீழிருந்து வருவதில்லை. எப்போதும் மேலிருந்தே வருவது. ’ என்ற கருத்துக்களும் 1948 இல் எதிரொலித்தன.

1947 ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் மலையக தேர்தல் தொகுதிகளில் இந்தியத் தமிழர்கள் அதிகளவில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக வாக்களித்திருந்தனர். இத்தேர்தலில் 07  இலங்கை இந்திய காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இலங்கை இந்திய காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெறாத ஏனைய மலையக மாவட்டங்களில் போட்டி யிட்ட இடதுசாரி வேட்பாளர்களுக்கு இந்திய வாக்காளர்கள் வாக்களித்திருந்த நிலையில் 14 இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடினர்.இத்தகைய  நிலைமைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் கண்களை உறுத்தியது.  பெருமளவான இந்தியர்கள் பிரசாவுரிமையும் வாக்குரிமையும் பெற நேர்ந்தால் தனது கட்சியின் அரசியல் வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று கருதிய ஐ.தே.கட்சி கடுமையான பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை சட்டங்களை நிறைவேற்றியது. பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமைகள் பறிக்கப் பட்ட இந்திய வம்சாவளி மக்கள் பல்வேறு துறைகளிலும் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இன்று வரை அதன் தாக்கம் எதிரொலிக்கின்றது.

மொழி என்பது மனிதனின் கண்டுபிடிப் புக்களில் முக்கிய இடத்தைப் பெற்று விளங்கு கின்றது. இந்நிலையில் 1956 இல் கொண்டு வரப்பட்ட ‘தனிச்சிங்கள சட்டம் ‘ நாட்டில் பல விளைவுகளுக்கும் வித்திட்டது. தனிச் சிங்க ளம் எனும் கொள்கை இந்த நாட்டில் பொது வாழ்க்கையில் தமிழ் மொழியை அதற்குரிய ஸ்தானத்தில் இருந்து வெறுமனே விலக்கி வைப்பதை மட்டும் கருதவில்லை.  ஆனால் அது இந்த நாட்டின் தமிழ் மொழி பேசும் மக்களை இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார வாழ்க்கை என்பவற்றில் இருந்தே வெளியே தள்ளி வைக்கின்றது’ என்று தமிழரசுக் கட்சியின் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் (1964) முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்த வகையில் இலங்கையின் அரசக ரும மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி காணப் படுகின்றபோதும் மலையக மக்கள் இதன் நன்மைகளை அனுபவிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தமிழை தாய் மொழியாகக் கொண்ட இவர்களுக்கு தமிழ் மொழியிலேயே நடவடிக்கைகள் இடம்பெறுதல் வேண்டும். எனினும் அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் இது எந்தளவுக்கு சாத்தியமாகியுள்ளது என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.

அரச நிறுவனங்களில் இருந்து அனுப் பப்படும் கடிதங்கள், சுற்றுநிருபங்கள் உள்ளிட்ட பலவும் இன்னமும் தனிச்சிங்கள மொழியி லேயே அனுப்பப்படுவதாக தமிழ் மக்கள் விசனப்படுகின்றனர்.

கல்வி மற்றும் ஏனைய புலத்தைச் சேர்ந்த தமிழ் உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழியிலேயே கருத்தரங்குகள் இடம்பெற்று வருகின்றமை குறித்தும் விசனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் மொழி ரீதியாக மலையக மக்கள் எதிர்கொள்ளும்  உரிமை மீறலாக அமைந்துள்ளது. இவற்றுக்கான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டு மலையக மக்களின் மொழியு ரிமை உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.

நிறைவேறாத வாக்குறுதிகள்

நாட்டின் தேசிய வருவாயில் கணிசமான பங்களிப்பை நல்கும் இம்மக்களுக்கு கையளவு நிலமேனும் இல்லை. பெரும்பான்மை மக்களுக்கு நிலவுரிமை பெற்றுக் கொடுக்கப் படும் நிலையில் மலையக மக்களுக்கான நிலவுரிமை மறுக்கப்பட்டு வருகின்றது. அத் தோடு லயத்து வாழ்க்கையில் இவர்கள் பல பாதிப்புக்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். வீட்டுரிமை மறுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்தகால மற்றும் சமகால ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளால் மட்டுமே இச்சமூகத்தை திருப்திப்படுத்த முனைகின்றனர். இந்நிலையில் இவர்களின் நிலவுரிமை மற்றும் வீட்டுரிமை கனவு நனவாக வேண்டும்.

அரசாங்கம் தேசிய ரீதியில் பல வேலைத் திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.  இவ்வேலைத்திட்டங்கள் மலையக மக்களை உரியவாறு வந்தடையாத நிலையில் இம்மக்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றமையும் ஒரு உரிமை மீறலேயாகும். சுகாதார நிலைமைகளைப் பொறுத்தவரையில் ஆரம்ப காலம் தொட்டே இம்மக்கள் சவால்களை எதிர்கொண்டு வந்துள்ள னர்.

நீண்ட காலமாக பிரசாவுரிமை அற்றவர் களாக இருந்த இச்சமூகத்தினர், அதன் காரணமாக அரசின் ஊடாக வழங்கப்படும் சுகாதார நலன்கள் உள்ளடங்கலான அரச நலச்சேவைகள் கிடைக்கப்பெறாதவர்களாக காணப்பட்டனர். 19 ம் நூற்றாண்டு காலப்பகுதியில் இவர்கள் மத்தியில் காணப்பட்ட சமூக, பொருளாதார காரணிகளும், இவர்களுக்கெதிரான அரசியல் பாரபட்சங்களும் இவர்களது சுகாதார வாழ்க்கையில் இன்னும் அதிகமான பாதிப்புக்களைக் கொண்டு வந்தன.

முக்கியமாக தோட்டங்களில் இவர்களது உழைப்பு ஆங்கிலேய பெருந்தோட்ட செய்கையாளர்களால் அளவுக்கதிகமாக சுரண்டப்பட்டமையும், அவர்களுக்கு கிடைக்கப்பட்ட உணவு வகைகள் சுகாதார மற்ற வையாகவும், போஷாக்கற்றவை யாகவும் காணப் பட்டமையும் இவர்களது உடல் நிலையில் மேலும் பல பாதிப்புக்களை கொண்டு வந்தது.

தொழில் ரீதியாக பல தொழிலாளர்கள் நெருக்கீடுகளுக்கு உள்ளாகி வரும் நிலையில் தொழிற்சட்டங்கள் செயலிழந்த போக்கினைக் கொண்டுள்ளன. இந்நிலையில் புதிய தொழிற்சட்டங்களை ஆக்கும் முனைப்புகள் இடம் பெற்று வருகின்றன. இதனிடையே புதிய தொழிற்சட்டங்களை ஆக்குவதை விடுத்து உள்ள தொழிற்சட்டங்களை முறையாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இவ்வாறாக மலையக மக்கள் உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் உள்ளாகி வரும் நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என் பதனை வலியுறுத்தி கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் அண்மையில் மாத்தளையில் கவன யீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தி இருந்தது. பெருந்தொகையான மக்கள் இதில் கலந்து கொண்டனர். அரசாங்கத்துக்கும், கொள்கை வகுப்

பாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அழுத் தம் கொடுக்கும் வகையிலேயே மேற்படி ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் பொதுக்கூட்ட மும் இடம்பெற்றது. காணியுரிமை, வீட்டுரிமை, சம்பள அதிகரிப்பு, மொழியுரிமை, அரசியல் உரிமை, பெண்களுக்கான உரிமை போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. மலையக மக்களுக்கான உரிமைகள் பலவும் ஒடுக்கப்பட்டு அவர்களை வேரறுக்கும் இனவாதிகளின் முயற்சி தொடரும் நிலையில் இதனை தோற்கடித்து அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.