இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர் படுகொலைகளின்  விளைவுகள் என்ன? –  வேல்ஸில் இருந்து அருஸ்

பாலஸ்த்தீன இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் மேற்கொண்ட ஏவுகணைத்தாக்குதலில் 12 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவதற்காக லெபனான் மீது பெருமெடுப்பிலான  தாக்குதல் ஒன்றை இஸ்ரேல் நிகழ்த்தலாம் என எதிர்பார்க் கப்பட்ட போதும் இஸ்ரேலின் எப்-35 ரக தாக்குதல் விமானங்கள் லெபனான் மீது மேற் கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் பிராந்திய தளபதிகளில் ஒருவரான பேட் சுஹிர் கொல்லப்பட்டிருந்தார். இந்த தாக்குதல் இடம் பெற்ற 24 மணி நேரத்திற்குள் ஈரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் பரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்குமான போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் தொடர் பேச்சக்களில் ஈடுபட்டிருந்த ஹனியே கொல்லப்பட்டது என்பது அமைதிக்கான முயற்சிகளை சீர்குலைத்து போரை மேலும் விரிவாக்கம் பெறவைக்கும் என்ற கருத்துக்களையே தற்போது உருவாக்கியுள்ளது. அமைதி முயற்சியில் நடுவராக செயற்பட்ட ஒருவரை ஒரு தரப்பு படுகொலை செய்யும் போது அமைதி எவ்வாறு சாத்தியமாகும் என கேள்வி எழுப்பியுள்ளார் கட்டாரின் வெளிவிவகார அமைச்சர்.

ஈரானின் புதிய அதிபர் மசூட் பெஸஸ் கியானின் பதவியேற்பு விழாவில் செவ்வாய்க் கிழமை(30) கலந்துகொண்டுவிட்டு ஈரானின் தலைநகர் தெஹிரானின் வடக்கு பகுதியில் உள்ள அரச விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த சமயம் ஏவுகணைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள் ளார். கட்டாரின் டோகாவில் தங்கியிருந்த கனியா அங்கிருந்தே ஈரான் சென்றிருந்தார்.

அவரின் படுக்கை அறையினை அதிகாலை 2 மணியளவில் ஏவுகணை துல்லியமாகத் தாக்கி யதாகவும், இந்த சம்பவத்தில் அவரும் அவரின் மெய்பாதுகாப்பாளரும் கொல்லப்பட்டதாகவும் ஈரானின் புரட்சிகர இராணுவம் தெரிவித்தள்ளது.

ஆளில்லாத தாக்குதல் விமானத்தின் மூலம் ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாக ஈரானின் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். ஒரே ஒரு வெடிப்பதிர்வு கேட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து சமூகவலைத்தளங்களில் கூட அதிக செய்திகள் பகிரப்படவில்லை.

இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் பொதுச் செயலாளர் சியாட் அல் நகலாவும் அவரின் அணியினரும் கனியாவின் கட்டிடத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்தில் தங்கியிருந்தபோதும் அவர்கள் இந்த தாக்குதலில் இருந்து தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் என்பது ஈரானின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கேள்விகளை எழுப்பியுள் ளதுடன், ஈரான் தனது நாட்டுக்குள் நிகழ்ந்த தாக்குதலுக்கு பதிலடியை கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்களையும் தோற்றுவித்துள்ளது. தனது நாட்டுக்குள் இடம்பெற்ற இந்த தாக்குதல் குறித்து ஈரான் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் முறையிட்டுள்ளது.அதேசமயம் தனது சிறப்பு படைப்பிரிவான காட் படைப்பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் அவசரமான பாதுகாப்பு மாநாட் டையும் நடத்தியுள்ளது.

இந்த கோழைத்தனமான கொலை குறித்து இஸ்ரேல் கவலைப்படும் நிலையை ஏற்படுத்துவேன் என தெரிவித்துள்ள ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன்  ஈரான் தனது ஆட்புல ஒருமைப்பாடு,கௌரவம் ஆகியவற்றை பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தலைவரின்  கொலைக்கு பழி வாங்குவது ஈரானின் கடமை என ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர்  இஸ்மாயில் ஹனியே  கொல்லப்பட்டுள்ளமை மத்திய கிழக்கை முழு மையான ஒரு யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள் ளது என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகத் தின் மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான பேராசிரியர் நடெர் ஹசேமி குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் தலைவரின் படுகொலை முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு மத்திய கிழக்கை முழுமையான யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது என  அவர்தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்த தாக்குதல் குறித்து தமது அமைச்சர்கள் யாரும் கருத்துக்க ளைத் தெரிவிக்கக்கூடாது என்ற உத்தரவை இஸ் ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத் தனியாகு பிறப்பித்துள்ளார். மேலும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்பதால் இஸ்ரேலின் சில பகுதிகளில் வான்போக்கு வரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து தமக்கு அதிக தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது அமெரிக்கா. அதே சமயம் இஸ்ரேல் மீது தாக்குதல் இடம்பெற்றால் அமெரிக்கா உதவிக்கு செல்லும் என அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்ரின் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கான உரிமையை இஸ் ரேல் கோராதுவிட்டாலும், இதனை இஸ்ரேல் தான் மேற்கொண்டது என ஈரான் மற்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் ஆரம்பமாகிய பின்னர் கொல்லப்பட்ட ஹமாஸின் இரண்டாவது அரசியல் பிரிவுத் தலைவர் இவராவார்.

கடந்த ஜனவரி மாதம் லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹமாஸின் அரசியல் பிரிவின் நான்காவது நிலைத் தலைவரான சாலே அல் அருhரி கொல்லப்பட்டிருந்தார். அந்த தாக்குதலின் பின்னர் பேசிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு ஹமாஸின் எல்லாத் தலைவர்களும் இவ்வாறு கொல்லப்படுவார்கள் என தெரிவித்திருந்தார்.

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித் துள்ள ரஸ்யா இந்த அரசியல் படுகொலையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. கட்டார் துருக்கி, பாகிஸ்தான், சீனா ஜோர்டான் உட்பட பல நாடுகள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல் என்பது மத்தியகிழக்கில் அமைதி ஏற்படுவதை பாதிப்பதுடன் போர் மேலும் விரிவாக்கம் பெறவே வழிவகுக்கும் என பல நாடுகள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஊடகமான சிஎன்என்னும் அதனைத் தான் தெரிவித்துள்ளது.

அதேசமயம், ஹமாஸின் நடவடிக்கைகளை இந்த தாக்குதல் பாதிக்காது என இஸ்ரேலின் பாதுகாப்புச் சபையின் முன்னாள் தலைவர் கொய்ரா எய்லான்ட் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மற்றும் லெபனான் அமைப்புக்களுக்கு தலைவர்களை இழப்பது ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல. 1992 ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா அமைப்பின் நிறுவுனரும் தலை வருமான சயித் அபாஸ் முசாவியையும் அவரின் குடும்பத்தினரையும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு படுகொலை செய்திருந்தது. ஆனாலும் அதன் பின்னர் பதவியேற்றிருந்த தற்போதைய தலைவர் சயீட் ஹசான் நஸ்ரல்லா அந்த அமைப்பை மேலும் வலுவான நிலைக்கு உயர்த்தியிருந்தார். ஹமாஸ் அமைப்பும் பல தலைலவர்களை இழந்துள்ளது ஆனாலும் அடுத்த தலைமுறை போராட்டத்தை வழிநடத்தவே செய்கின்றது.

இருந்தபோதும் இஸ்ரேலின் இந்த நடவடிக் கையின் பொருள் என்னவென்றால் மிகப்பெரும் போர் ஒன்று எற்படும் அபாயம் அருகில் வந்துள்ளது. ஒரு மிகப்பெரும் போரின் ஊடாகவே மத்திய கிழக்கில் அமைதி திரும்பும் வாய்ப்புக்கள் உள்ளது. ஆனால் இந்த போரில் பெருமளவான அப்பாவி மக்கள் பலியாகப்போவது தான் வருத்தமானது.