‘தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் எப்போதும் எதிராகவே இருந்து வருகின்றனர்.இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாலும் எவ்விதமான பயனும் ஏற்படப்போவதில்லை என்பது திண்ணமாகும். இந்நிலையில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது காலத்தின் தேவையாகும் என்று நான் கருதுகின்றேன்.எமது கொள்கையை எல்லா மட்டங்களிலும் அடையாளப்படுத்துவதற்கு இது உந்துசக்தியாக அமையும்’ என்று சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஈழமக்களின் நிலைப்பாடு எவ்வாறு அமைய வேண்டும் என்று கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி இரத்தினவேல் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இதுவரைக்கும் எல்லா தேர்தல்களிலும் வழக்கமான கட்சிகளுக்கு ஈழத்தமிழர்கள் வாக்களித்துள்ளனர்.இந்நிலையில் இந்த முறையும் அவர்களுக்கு எந்தவிதமான ஒரு மாற்றுத்தெரிவும் காணப்படவில்லை.இத்தகைய ஒரு நிலையில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்? அல்லது யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதைப்பற்றி ஒரு நிலையான ஒரு முடிவுக்கு வர முடியுயாதவர்களாக அவர்கள் காணப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க இவர்கள் எல்லோரும் பிரதானமான விடயங்களில் உடன்படாத நிலையினையே காண முடிகின்றது.குறிப்பாக 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகள் முறையாக இயங்க வேண்டும் மற்றும் அதற்கான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதில் அவர்கள் உடன்பாடு இல்லாதவர்களாக காணப்படுகின்றார்கள்.இவ்வாறாக தமிழர்களின் உரிமைகள் குறித்த பல விடயங்களிலும் அவர்கள் எதிராகவே இருந்து வருகின்றமை கடந்தகால வரலாறாகும்.இவ்வாறாக தமிழர்களின் நலன்களுக்கு வலுசேர்க்காத நிலையில் ஏன் அவர்களுக்கு நாம் தொடர்ந்தும் வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் எமக்குள் பலமான ஒரு கேள்வி எழுகின்றது.
இதேவேளை தமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாடு இல்லாது தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டு சுக்குநூறாக உடைந்து போயிருக்கின்றார்கள்.இது ஆரோக்கியமான சகுனமல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்.அத்தோடு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் முனைப்புக்களும் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன.’டீல்’ பேசும் வகையில் சிலரின் முன்னெடுப்புக்களும் இடம்பெற்று வருகின்றன.இத்தகைய ‘டீல்’ பேசும் விடயங்கள் காரணமாக கடந்தகால தேர்தல்கள் திசைதிருப்பப்பட்டுள்ளமையையும் இங்கு குறிப்பிட்டாதல் வேண்டும்.இத்தகைய டீல் பேர்வழிகள் பலர் சமகாலத்திலும் களமிறக்கப்பட்டிருப்பதாகவும் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.இத்தகைய பல பின்னணிகள் காணப்படுகின்றன.
ஜேவிபி என்று சொல்லக்கூடிய மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகள் எப்போதும் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே காணப்படுகின்றது.1980, 90 களில் இடம்பெற்ற அராஜக நிலைமைகள் தமிழர்களுக்கு எதிரானதாகவே காணப்படுகின்றன.இதனை யாரும் அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிடவில்லை.தமிழர்கள் இக்கட்சியின் மீது எவ்விதமான நம்பிக்கையும் இல்லாதவர்களாக காணப்படுகின்றனர்.இதனிடையே யாருக்கு வாக்களித்தும் எவ்விதமான பயன்களும் ஏற்படப்போவதில்லை என்ற எண்ணம் தமிழ் மக்களின் ஆழ்மனதில் ஊறிப்போய் இருக்கின்றது.இந்த நிலையில் ஈழத்தமிழர்கள் ஒரு திரிசங்கு சொர்க்க நிலையில்தான் இருக்கின்றார்கள்.இதனிடையே பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த முயற்சியை நானும் வரவேற்கின்றேன்.பொதுவேட்பாளர் எல்லோருக்கும் பொருத்தமானவராக வந்தால் மிகவும் நல்லது.எங்களின் கொள்கை இதுதான் என்பதை எல்லா மட்டங்களிலும் அடையாளப்படுத்துவதற்கு பொது வேட்பாளர் ஒருவரை அறிமுகப்படுத்துவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றே கருதுகின்றேன்.கொரோனா போன்ற இடர்காலங்களின்போது சமத்துவம் , தமிழர்களின் உரிமைகள் தொடர்பாக அதிகமாக பேசப்பட்டது.எனினும் இதன் பின்னர் பழைய நிலையிலேயே நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை கசப்பான உண்மையாகும்.இனவாத சிந்தனை என்பது இலங்கையின் ஆட்சியாளர்களிடம் தொடர்ந்தும் இருந்து கொண்டே இருக்கின்றது.இரத்தத்தில் ஊறிப்போனதாக இந்த விடயம் ஆகி இருக்கின்றது.இந்த நிலையில் எந்த ஒரு வேட்பாளரை யாம் ஈழத்தமிழ் மக்கள் நம்பக்கூடிய நிலையில் இல்லை.
மலையக மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கென்று தனி விருப்பு, வெறுப்புகள் காணப்படுகின்றன.அவர்களின் பிரச்சினைகள் ஏனைய சமூகத்தினரின் பிரச்சினைகளில் இருந்தும் வேறுபட்டவையாகக் காணப்படுகின்றன.அடிப்படை தேவைகள் கூட நிறைவு செய்யப்படாத நிலையில் அம்மக்கள் அதற்காக போராடி வருவதும் தெரிந்ததேயாகும்.அம்மக்களிடையே பல்வேறு கருத்து வெளிப்பாடுகள் எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன.இந்நிலையில் அவர்கள் தமக்கு யார் உண்மையாக சேவையாற்றுவார்கள்? மலையக மக்களின் உரிமைகளுக்கு யார் உத்தரவாதம் தருவார்கள்? என்பதை விளங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டியது அவசியமாகும்’.