சட்டவிரோதமான முறையில் மியான்மாரில் வேலை தேடுவதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இலங்கையர்களை வலியுறுத்தியுள்ளார்.
சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் அல்லது மனித கடத்தலில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் மியான்மாரில் வேலை தேடுவதைத் தவிர்க்குமாறு மக்களை அரசாங்கம் கடுமையாக அறிவுறுத்துகிறது என்று பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.
மியன்மாரில் சட்டவிரோதமாக வேலைக்காகச் சென்ற இலங்கையர்கள் குழுவொன்று அங்கு பயங்கரவாத குழுக்களால் நடத்தப்படும் இணையக் குற்றப் பகுதியில் உள்ள முகாமில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், 89 இலங்கையர்கள் சட்டவிரோதமாக மியன்மாருக்கு வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மியன்மார் அரசாங்கத்தின் உதவியுடன் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு முயற்சியின் மூலம் 40 இலங்கையர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் சைபர் கிரைம் பகுதியில் 54 இலங்கையர்கள் சிக்கியுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம், மியான்மார் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன்,சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ”சில நபர்கள் சட்டவிரோதமான வழிகளில் வேலைவாய்ப்புக்காக மியன்மாருக்கு தொடர்ந்து செல்வதாக அறியமுடிகிறது.
அனைத்து இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைக்கப்பெறுமாயின் பாதுகாப்பு அமைச்சு அல்லது குற்றப் புலனாய்வு திணைக்களத்தை தொடர்பு கொள்ளுங்கள்” என கேட்டுக்கொண்டார்.