இருப்பை உறுதிப்படுத்தும் மக்களின் வழிபாட்டு முறைகள் …  து.கௌரீஸ்வரன்

வடக்கு கிழக்கில் தமிழர்களின் இருப்பு என்பது அவர்களின் பண்பாட்டு விழுமியங்கள்,வரலாறுகளில் தங்கிipயுள்ளது. தமது பண்பாடுகளையும் வரலாறுகளையும் தமிழ் மக்கள் பாதுகாக்கத் தவறினால் அவர்களின் இருப்பு என்பது கேள்விக்குறியாகவே மாறிவிடும் நிலையுருவாகும்.

கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரை யில் சமய சடங்குகளும் வரலாறுகளும் பின்னிப்பிணைந்ததாகவேயிருக்கின்றது.சமயத்தினை புறந்தள்ளி வரலாறுகளை முன்நகர்த்தமுடியாது.அவ்வாறு முன்நகர்த்தப்படுமானால் அந்த வரலாறு நிராகரிக்கப்படும் வரலாறுகளாகவே காணப்படும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பண்பாடுகளும் அவர்கள் கடைப்பிடிக்கும் வாழ்வி யல் முறைகளும்தான் கிழக்கில் தமிழர்களின் நீண்டகால வரலாற்றினையும் இருப்பினையும் வெளிப்படுத்துகின்றது.கிழக்கில் இன்றும் காணப் படும் பழங்குடி மக்கள் தமது பண்பாடுகளையும் கலாசாரங்களையும் நவீன யுகத்திற்கும் மத்தியில் பேணி பாதுகாக்கும் நிலைமையினைக் காண முடிகின்றது.

கிழக்கிலங்கையின் குறிப்பாக மட்டக்களப் பின் பழங்குடி மக்களைச் சாராத தமிழ்ப் பண்பாடுகளில் மாரியம்மன் சடங்கு மிகவும் முக்கியத்துவம் கொண்டதாகக் காணப்படுகின்றது. மட்டக்களப்புத் தமிழ்ப் பண்பாடுகளின் தனித்து வங்களை விளங்கிக் கொள்வதற்கு மாரியம்மன் சடங்குப் பண்பாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

மாரியம்மன் சடங்குப் பண்பாட்டைப் பற்றிய கவனிப்பு அற்ற பார்வை மட்டக்களப்பின் பண்பாட்டைச் சரியாக விளங்கிக் கொள்ளாத அரைகுறைப் பார்வையென்றே கூறலாம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்று மட்டக்களப்பின் பண்பாடுகளில் கண்ணகியம்மன் சடங்கும் மாரியம்மன் சடங்கும் முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றன.வைகாசி எப்படிக் கண்ணகிக்கு முக்கியமோ அதுபோல ஆனிப் பூரணை மட்டக்களப்பில் மாரியம்மனுக்குரியதாகச் சிறப்புற்று வருகிறது.

மிகப்பெரும்பாலும் மட்டக்களப்பில் உள்ள ஊர்கள் அனைத்திலும் மாரியம்மன் சடங்கு வருடாந்தம் நடைபெற்று வருகின்றது. மட்டக் களப்பில் ஆனி மாதத்தில் பூரணையினை நிறைவு நாளாகக் கொண்டு ஊர்கள் தோறும் மாரியம்மன் சடங்கு நடைபெற்று வருவதனைக் காணலாம்.

மட்டக்களப்பில் மாரியம்மனுக்கான சடங்கை ஒவ்வொரு சமூகத்தவரும் ஊரவரும் தத்தமது வரலாறு பண்பாடு என்பவற்றிற்கேற்ப சிறு சிறு வித்தியாசங்களுடன் தனித்துவமாகவும் அதேநேரம் மாரியம்மன் பத்ததி எனும் பொது விதிகளுக்குட்பட்டும் வடிவமைத்து முன்னெடுத்து வருவதனை உய்த்தறிய முடிகிறது.

மேற்கைரோப்பியரின் காலனித்துவக் காலத்தில் உள்ளுர்க் கோவில்களில் சமூகத்தவரும் ஊரவரும் ஒன்றுகூடி மாரியம்மனுக்குச் சடங்கு செய்ய முடியாத நிலைமை உருவான போது ஊர்களில் சிலருடைய வீடுகளில் இரகசியமாக மாரியம்மனுக்கும் கன்னிமாருக்கும் சடங்கு செய்து மட்டக்களப்பார் மாரியம்மன் சடங்கைத் தற்காத்து வந்துள்ளார்கள். இதன் தொடர்ச்சி இன்றும் ஆங்காங்கே சில வீடுகளில் நடந்தேறி வருகின்றது.

வைகாசியில் நடைபெறும் கண்ணகியம் மன் சடங்கிற்குள்ளும் மாரியம்மன் முக்கியத்து

வம் பெற்றிருப்பதைக் காணலாம். உதாரணமாக மட்டக்களப்பின் கோராவெளி, மட்டுநகரை யண்டிய கண்ணகி கோவில்களில் நடைபெறும் சடங்குகளை உற்று நோக்கும் போது இதனை அவதானிக்க முடிகின்றது. அதாவது கலை யேறித் தெய்வமாடிச் சடங்கு நடைபெறும் கண்ணகி வழிபாட்டில் மாரியம்மன் மிகுந்த முக்கியத்துவ முடையவராக விளங்கி வருகிறார்.

இதேபோல் ஆண்தெய்வங்களின் பெய ரில் உள்ள மட்டக்களப்பின் பத்ததிச் சடங்குக் கோவில்களிலும் சடங்கின் ஆதார சக்தியாக மாரியே காணப்படுகிறார். வளத்தின் தெய்வமான மாரியம்மன் இல்லாமல் மட்டக்களப்பின் பத்ததிச் சடங்கே இல்லை என்று கூறலாம். மட்டக்களப்பின் பத்ததிச் சடங்குகளை ஆழமாக அவதானிக்கும் போது இவற்றினை விளங்கிக்கொள்ள முடிகின் றது.

மட்டக்களப்பின் பத்ததிச் சடங்குகளையும் அவற்றின் பண்பாடுகளையும் நாடக ஆற்றுகைக் கோட்பாடுகளின் புரிதலுடன் மட்டும் நின்று கொண்டு உற்று நோக்காமல் வரலாறு, தத்துவம், பண்பாடு, நம்பிக்கை, மரபுரிமைகள், சூழலியல், உளவியல், பால்நிலை, நிறுவன சமயங்களின் தாக்கம், காலனியநீக்கம் என்ற இன்னோரன்ன பல்வேறு கோட்பாடுகள், சிந்தனைகள் முதலா

னவற்றின் புரிந்து கொள்ளலுடன் தொடர்ச்சியாக அவதானிக்கும் போதும், சடங்குகளிலிருந்து நம்மை அந்நியப்படுத்தாமல் அவற்றுடன் நெருக் கமான ஊடாட்டத்தினை மேற்கொண்டவாறு தொடர்ச்சியாக இயங்கி அனுபவங்களைப் பெறுவதன் மூலமாகவும் பத்ததிச் சடங்குகளைப் பற்றிப் பல்வேறு பரிமாணங்களில் புரிந்து கொள் ளவும் அதற்றின் நிறை குறைகளைக் காணவும் முடியும்.

இதனூடாக சமகாலத்தின் தேவைகளு க்கு ஏற்ற விதத்தில் சடங்குகளைத் தகவமைப் பதற்குமான ஆய்வறிவு அனுபவங்கள் நமக்கு வாய்க்கப்பெறும்.

இதேபோன்று வட இலங்கையிலிருந்து தமிழர் சமுதாயத்தின் பல பிரிவினர் பல் வேறு தேவைகளுடன் கடல் வழியாகக் கிழக்கிலங் கையின் கரையோரப் பகுதிகளை நோக்கி வந்து குடியேற்றங்களை உருவாக்கிய வரலாற்றுக் கால கட்டங்கள் இருந்துள்ளமைக்கான சான்றுகளாக சில ஆலயங்களும் உள்ளன..

unnamed  இருப்பை உறுதிப்படுத்தும் மக்களின் வழிபாட்டு முறைகள் ...  து.கௌரீஸ்வரன்

நரசிங்கத்தைக் குலதெய்வமாக வழிபட்ட நம்பிகுலத்தவர் சிலர் வட இலங்கையின் பல ஊர்களில் வாழ்ந்து பின்னர் கடல் மார்க்கமாக மட்டக்களப்பிற்கு வந்து மட்டக்களப்பின் பண்டைய துறைமுக நகரான சூரியத்துறையினை (தற்போது திருப்பெருந்துறை என்று கூறப்படும் இடம்) அடுத்துள்ள விடத்தல்முனை எனும் இடத்தில் சில காலம் வாழ்ந்து பின்னர் அங்கிருந்து ஏற்கெனவே தமது சமூகத்தவர் வாழும் கோட்டைமுனை (பொதுச்சந்தைக்கருகிலுள்ள அரசடிப்பிள்ளையார் வீதி) எனும் இடத்திற்குக் குடிபெயர்ந்து இறுதியாக நரசிங்கவயிரவரின் வேண்டுகோளின்படி தற்போது கோயிலுள்ள எல்லை வீதியில் நரசிங்க வயிரவருக்கு நிலையான கோயிலமைத்த நீண்டதொரு வரலாற்றை இக்கோயிலின் கதை எடுத்தியம்பி நிற்கின்றது.

அதாவது நரசிங்கவயிரவரை வழிபட்ட ஆதிக் கப்புகனான கந்தன்கதிராமன் அல்லது மொட்டையாச்சி என்பவரும் அவருடைய நெருங்கிய உறவினரும் நரசிங்க வயிரவரின் அடையாளத் துடன் கடல் மார்க்கமாக வட இலங்கையிலிருந்து மட்டக்களப்பின் விடத்தல்முனை வரை வந்து அங்கு நரசிங்க வயிரவருக்குச் சிறு கோயிலமைத்துச் சிறிது காலம் அங்கு வாழ்ந்து பின்னர் தமது உறவினர்கள் வாழ்ந்துவந்த கோட்டைமுனைக்கு இடம்பெயர்ந்தாக வரலாறுகள் கூறுகின்றன.

ஏற்கெனவே மட்டக்களப்பில் வாழ்ந்த நம்பிகுல மக்கள் வழிபட்டு வந்த மட்டக்களப்பிற் கேயுரிய மடாலயத்தை மையமாகக் கொண்ட மாரியம்மன் வழிபாடும் அதற்கேயான பத்ததி முறைமைகளும் நரசிங்க வயிரவருடன் இணைந்த வகையில் கட்டுருவாக்கம் பெற்றுள்ளன.

சடங்கு வழிபாட்டில் பின்பற்றப்படும் ஒவ்வொரு காரியத்திற்கும் அதற்கேயான காரணங் கள் தெளிவாக இருந்து வருவதனைக் காணலாம். எடுத்துக் காட்டாக இங்கு சொர்ணாளியில்லாது பறையிசைக்கப்படும் முறைமை தனித்துவமானது.

இதேபோல் அடையாளச் சடங்கு, கொடிமரம் நிறுத்தும் சடங்கு, வதனமார் காவல் புரிதல், வயிரவர் ஊஞ்சலாடல், கிரகசாந்தி வழிபாடு, மாரியம்மன் குளுர்த்தி ஏடு படித்தல், தெய்வக்காரர் களின் சந்ததித் தொடர்ச்சி, சடங்கிற்கான உரித்துடைமை முதலியன தனித்துவங்களைக் கொண்டமைந்தவையாக இருப்பதனை ஆதாரங்க ளுடாக விளங்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு கிழக்கு தமிழர்களின் வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் பின்னிப்பிணைந்ததன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பானது உறுதியாகியிருந்தாலும் தொடர்ச்சியாக பண்பாட்டு வாழ்வியல்கள் அழிவடைந்த வகையிலேயே வருகின்றது.இவை பாதுகாக்கப்பட்டு எதிர்கால சந்ததிக:கு கொண்டுசெல்லும்போது தமிழர்களின் இருப்பும் பாதுகாக்கப்படும்.

தமிழ் தேசியத்தினைப்பொறுத்தவரை யில் தமிழர்களின் பாரம்பரிய வரலாறுகள் என்பது அசைக்கமுடியாத ஒரு இடத்தி னைக் கொண்டுள்ளது.அவையை நாங்கள் புறந் தள்ளிச்செயற்படமுடியாது. புறந்தள்ளிச் செயற் படும்போதே பௌத்த மேலாதிக்கம் அதனை சாதகமான பயன்படுத்தமுனைகின்றது.இதற்கு உதாரணமாக கதிர்காம கந்தன் ஆலயத் தினை குறிப்பிடமுடியும்.

தமிழர்கள் காலம்காலமாக பராமரித்துவந்த பண்பாடுகளையும் மத அடையாளங்களையும் தொலைக்கும் நிலைமையினை பயன்படுத்தி பௌத்த பேரினவாதம் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றது.எமது பாரம்பரியத்தினை தங்கள் பாரம்பரிய மாற்றிக்

கொண்டு இன்று அபகரிப்புகளை செய்ய முனைகின்றது.இந்த நிலைமை எதிர்காலத்தில் மாற்றப்பட்டு எமது பாரம்பரியங்களை எதிர் கால சந்ததி கடைப்பிடிக்க வழியேற்படுத் தப்படும்போது எமது இருப்பு பாதுகாக்கப்படும்.