தாமதிக்காமல் தோ்தலை நடத்துங்கள் – ஜே.வி.பி. வலியுறுத்து

Tilvin 768x401 1 தாமதிக்காமல் தோ்தலை நடத்துங்கள் - ஜே.வி.பி. வலியுறுத்துகூடிய விரைவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை அறிவித்து தேர்தல் தொடர்பில் மக்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களை இல்லாது செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியினால் நேற்று புதன்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தோ்தல் தொடா்பான தினத்தை தீர்மானிக்கும் அதிகாரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது. இந்த தினம் தொடர்பில் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன்படி தங்களுக்குரிய அதிகாரங்களுக்கமைய கூடிய விரைவில் தினத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினாா்.

“ஆட்சியில் இருப்பவர்களின் செயற்பாடுகளால் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமா? இல்லையா? என்று மக்கள் சந்தேகத்துடன் இருக்கின்றனர். ஆணைக் குழுவும் காலத்தை எடுக்குமா என்று மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஆணைக்குழு காலம் தாழ்த்தாது தோ்தல் தினம் தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை எடுத்து மக்களிடையே உள்ள சந்தேகத்தை இல்லாமல் செய்ய வேண்டும்” என்றும் ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வலியுறுத்தினாா்.

”இதற்கு முன்னர் பல ஜனாதிபதித் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால் இம்முறை நடக்கும் தேர்தல் முக்கியத்துவமிக்கதாக இருக்கின்றது. ஜனாதிபதியொருவர் பதவி விலகிய பின்னர், நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதியொருவர் தெரிவான பின்னர் நடக்கவுள்ள முதலாவது தேர்தலாகும். அதேபோன்று மக்கள் போராட்டத்தின் பின்னர் நடக்கும் முதல் தேர்தலாகும். அதேபோன்று அதிகளவான தடைகளை கொண்ட தேர்தலாகவும் இது இருக்கின்றது” என்றும் ரில்வின் சில்வா குறிப்பிட்டாா்.

தொடா்ந்து கருத்து வெளியிட்ட ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, “மக்கள் தேர்தலை எதிர்பார்க்கையில் ஆட்சியாளர்கள் தேர்தலுக்கு பயப்படுகின்றனர். தேர்தலில் வெற்றிப்பெற முடியாது என்பதனால் ரணிலின் பின்னால் இருப்பவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசியலமைப்பில் ஏதாவது ஓட்டைகள் இருக்கின்றனவா? என தேடிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இப்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது அதன்படி கூடிய விரைவில் தேர்தல் தினம் தொடர்பில் தீர்மானிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயாதீன ஆணைக்குழுவே என்பதனை தேர்தல்கள் ஆணைக்குழு நிரூபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவா் தெரிவித்தாா்.